பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஆவணங்களை அளிக்க சிஐசி உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு பிரதமர் அலுவலகத்துக்கு

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவு விவரங்களைக் கேட்டு பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றிடம் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி அவரது மனுவுக்கு பதிலளிப்பதற்கு பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும் மறுத்துவிட்டன.
அதையடுத்து, மத்திய தகவல் ஆணையத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார். அவரது மனுவை விசாரித்த மத்திய தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பிரதமரின் வெளிநாட்டுப் பயண செலவு விவரங்கள் அடங்கிய கோப்புகளை ஆராயாமல், அதில் பாதுகாப்புத் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளனவா? அதில் இடம்பெற்றுள்ள விவரங்களை வெளியிடலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய முடியாது.
எனவே, பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறித்த ஆவணம் ஒன்றை முதலில் மத்திய தகவல் ஆணையத்துக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக, மத்திய தகவல் ஆணையத்திடம் லோகேஷ் பத்ரா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நிதி நெருக்கடியில் தவித்த ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதால், ஒரு வகையில் இது பொதுநலன் சார்ந்த விவகாரமாகும்.
முன்னாள் பிரதமர்கள், இந்நாள் பிரதமர் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விமானங்கள், அந்தப் பயணங்களுக்கான கட்டண விவரங்கள், இதுவரை ஏர்-இந்தியா விமான நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட தொகை ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
ஏனெனில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி தகவல்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 15 முதல் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான கட்டணங்கள், ஏர்-இந்தியா விமான நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகத்தின் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு நீண்ட காலமாக தொகை பாக்கி வைத்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து, கட்டணத்தைச் செலுத்தும் முறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தாம் கோரியிருந்ததாக லோகேஷ் பத்ரா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com