என்எஸ்ஜி, சிஐஎஸ்எஃப், என்டிஆர்எஃப் படைகளுக்கு புதிய டிஜிபிக்கள் நியமனம்

தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி), தேசிய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) ஆகியவற்றுக்கு புதிய தலைமை இயக்குநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
என்எஸ்ஜி, சிஐஎஸ்எஃப், என்டிஆர்எஃப் படைகளுக்கு புதிய டிஜிபிக்கள் நியமனம்

தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி), தேசிய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) ஆகியவற்றுக்கு புதிய தலைமை இயக்குநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயரதிகாரிகள் நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அண்மையில் கூடி மூன்று துறைகளின் உயரதிகாரிகளின் நியமனங்களுக்கு ஒப்புதல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, அந்த அதிகாரிகளின் நியமன அறவிப்பை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:
மூன்று மத்திய படைகள்: சிஆர்பிஎஃப் கூடுதல் டிஜிபியாக உள்ள சுதிர் பிரதாப் சிங், தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் 2018, ஜனவரி 31-ஆம் தேதி வரை உள்ளது.
என்டிஆர்எஃப் தலைமை இயக்குநராக (கூடுதல் டிஜிபி அந்தஸ்து) உள்ள ஓ.பி. சிங் சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிஐஎஸ்எஃப் கூடுதல் டிஜிபியாக உள்ள ஆர்.கே.பச்னந்தா, என்டிஆர்எஃப் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குத் தக்கவாறு என்டிஆர்எஃப் தலைமை அதிகாரி பதவி டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட மூன்று ஐபிஎஸ் உயரதிகாரிகளும் மத்திய அரசுப் பணியில் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்களுக்கு தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டு புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த சுதிர் பிரதாப் சிங், மேற்கு வங்க பிரிவைச் சேர்ந்த பச்னந்தா ஆகியோரின் பதவிக் காலம் 2018, ஜனவரி 31 வரையிலும் உத்தர பிரதேச பிரிவைச் சேர்ந்த ஓ.பி.சிங்கின் பதவிக் காலம் 2020, ஜனவரி 31 வரையிலும் உள்ளது.
சிக்கலான அதிகாரி: இவர்களில் ஆர்.கே. பச்னந்தா, சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவி தனக்கு வழங்கப்படாமல் தமிழகப் பிரிவைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு வழங்கப்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்.
இந்த விவகாரத்தில் அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனத்துக்கு எதிராக தமிழக அரசும் வழக்குத் தொடுத்த நிலையில், மத்திய அரசு தலையீட்டின்பேரில் பச்னந்தா தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார். இதனால், உள்துறை வட்டாரத்தில் கையாளுவதற்கு மிகவும் சிக்கலான அதிகாரியாக பச்னந்தா கருதப்பட்டார்.
அதன் பிறகு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதற்கிடையே சிஆர்பிஎஃப் பணியில் சில காலம் நியமிக்கப்பட்ட பச்னந்தா, அண்மையில்தான் சிஐஎஸ்எஃப் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பிரிவுச் செயலர்: இதேபோல, மத்திய அமைச்சரவைச் செயலகத்தில் பாதுகாப்புப் பிரிவுச் செயலராக ஐபிஎஸ் உயரதிகாரி ராதாகிருஷ்ணன கினி நியமிக்கப்பட்டுள்ளார்.
1981-ஆம் ஆண்டு பிகார் பிரிவைச் சேர்ந்த இவர், தற்போது தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத் துறையில் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பிரதமர், முன்னாள் பிரதமர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்பிஜி), மத்திய துணை ராணுவப் படைகள், மத்திய காவல் அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகள் மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புப் பிரிவுச் செயலருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com