ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மலேசிய தொழிலதிபர்கள் இருவருக்கு ஜாமீனில் வெளி வர முடியாத பிடியாணை

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய சிபிஐ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசியா நாட்டின் மேக்சிஸ்...
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மலேசிய தொழிலதிபர்கள் இருவருக்கு ஜாமீனில் வெளி வர முடியாத பிடியாணை

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய சிபிஐ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசியா நாட்டின் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன், அந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல் ஆகிய இருவருக்கும் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடியாணை (வாரண்ட்) பிறப்பித்து தில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு:
வழக்கு தாமதம்: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய சிபிஐ இவ்வழக்கில் மலேசியாவைச் சேர்ந்த டி.அனந்த கிருஷ்ணன், அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காலகட்டத்தில் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நான்கு முறை அழைப்பாணை அனுப்பப்பட்டது.
ஆனால், அதைப் பெறுவதற்கான சாதகமான பதில் அந்நாட்டு தரப்பிடம் இருந்து வரவில்லை என சிபிஐ கூறியது. இதனால், வழக்கு விசாரணை நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட இருவரையும் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த "இண்டர்போல்' (சர்வதேச போலீஸ்) உதவியை அணுகுவதுதான் ஒரே வழி என்றும், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ விடுத்த கோரிக்யையை நீதிமன்றம் ஏற்கிறது. இதன்படி, சம்பந்தப்பட்ட இருவரையும் இண்டர்போல் உதவியுடன் நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனித் தனி விசாரணை: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு வெளிநாட்டினரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை தனியாகவும், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சன் டைரக்ட் டிவி, சௌத் ஏசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் தனியாக விசாரிக்கவும் சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இதன்படி தயாநிதி, கலாநிதி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 18-ஆம் தேதி நடத்தப்படும் என உத்தரவில் சிறப்பு நீதிபதி சைனி குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
பின்னணி: ஏர்செல் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் 2005-இல் வாங்கியது. இப்பரிவர்த்தனை நடைபெற, 2004-2007 ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2011-இல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதில் தயாநிதி மாறனின் சகோதரரும் சன் நிறுவனங்கள் குழும தலைவருமான கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் அப்போதைய இயக்குநராக இருந்த அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராகவும், சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செüத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட் ஹோல்டிங்ஸ், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2014, ஆகஸ்டில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஏர்செல் பங்குகளை வாங்கியவுடன் தயாநிதி மாறனின் சகோதரர் நடத்தி வந்த சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில், மேக்ஸிஸ் நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மூலம் ரூ.742 கோடி அளவுக்கு முதலீடு செய்ததாக சிபிஐ கூறியது.
கோடிக்கணக்கான பரிவர்த்தனை விவகாரம் என்பதால், அது தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி, செüத்
ஏசியா எஃப்எம் இயக்குநர்
கே.சண்முகம் ஆகிய நால்வர் மீதும், சௌத் ஏசியா எஃப்எம், சன் டைரக்ட் டிவி நிறுவனம் ஆகியவை மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com