சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம்: மத்திய அரசின் முடிவை காஷ்மீர் அரசு ஆதரிக்கும்

சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று ஜம்மு- காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் தெரிவித்தார்.
சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம்: மத்திய அரசின் முடிவை காஷ்மீர் அரசு ஆதரிக்கும்

சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று ஜம்மு- காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் (படம்) தெரிவித்தார்.
உரி பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்பது பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கடந்த 1960-ஆம் ஆண்டு, அதாவது கடந்த 56 ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து வரும் சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி, சீனாப் உள்ளிட்ட நதிகளின் நீரைப் பாசனத்துக்கும், மற்ற உபயோகத்துக்கும் ஜம்மு- காஷ்மீர் மக்கள் முழுவதுமாக பயன்படுத்த முடியவில்லை. எனவே இந்த ஒப்பந்தத்தால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பொருட்படுத்தவில்லை.
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை பாகிஸ்தான் மண்ணில் உருவாக்க மாட்டோம் என்று உறுதி அளித்த லாகூர் ஒப்பந்தத்தையும் பாகிஸ்தான் மதிக்கவில்லை. மாறாக ஒப்பந்தத்தை மீறி பயங்கரவாதிகளுக்கு அந்நாடு நிதியுதவி அளித்து வருகிறது.
இதுபோன்ற ஒப்பந்தங்கள், உறுதிமொழிகளை பாகிஸ்தான் மதிக்காதபோது நாம் மட்டுமே ஏன் அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும்? எனவே ஜம்மு- காஷ்மீர் மாநில மக்களுக்கு நன்மையையும், பாகிஸ்தானுக்கு நெருக்கடியையும் அளிக்கும்படியாக சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு முடிவையும் மாநில அரசு ஆதரிக்கும் என்றார் அவர்.
முன்னதாக, சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் தொடர வேண்டுமானால், பரஸ்பர நம்பிக்கையும், ஒத்துழைப்பும் அவசியம் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com