ஜம்மு-காஷ்மீரில் அமைதியான சூழல் உருவாக பாடுபடுங்கள்: மெஹபூபா முஃப்தி

ஜம்மு-காஷ்மீரில் சுமுகமான நிலை திரும்பி அமைதியான சூழல் உருவாவதற்கு பாடுபடுங்கள் என்று தனது மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தொண்டர்களுக்கு அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி அறிவுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீரில் அமைதியான சூழல் உருவாக பாடுபடுங்கள்: மெஹபூபா முஃப்தி

ஜம்மு-காஷ்மீரில் சுமுகமான நிலை திரும்பி அமைதியான சூழல் உருவாவதற்கு பாடுபடுங்கள் என்று தனது மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தொண்டர்களுக்கு அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி அறிவுறுத்தினார்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான்வானி கடந்த ஜூலை மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக அங்கு பெரிய அளவில் வன்முறைகள் நடைபெற்றன. இதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக காஷ்மீரில் ஓரளவுக்கு அமைதி திரும்பியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆளும் பிடிபி கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மெகபூபா முஃப்தி பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் நடந்து முடிந்த வன்முறைகளுக்கு விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளன. இனி ஓர் உயிர் கூட பறிபோக நாம் அனுமதிக்கக் கூடாது.
ஜம்மு-காஷ்மீரை சீரமைப்பது ஒன்றே எனது அரசின் முதன்மைப் பணியாக இருக்கும். நம் மக்கள் (காஷ்மீரிகள்) இதுபோன்ற ஏராளமான சூழல்களைக் கடந்துதான் வந்திருக்கிறார்கள். எனவே, இந்த நிலைமையிலிருந்து மீளுவது ஒன்றும் அவர்களுக்கு கடினமான காரியமாக இருக்காது என நம்புகிறேன்.
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியில் இருக்கும் பிடிபி-பாஜக கூட்டணியானது மக்களின் முன்னேற்றத்துக்காக குறைந்தபட்ச செயல்திட்டத்தை வரையறுத்தது. இத்திட்டத்தை செயல்படுத்த சுமுகமான சூழல் நிலவ வேண்டியது அவசியம். ஆனால், மாநில நலனை விரும்பாத சில சக்திகள் காஷ்மீரில் ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கிக் கொண்டே வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் நலனுக்காக பாகிஸ்தானுடன் சுமுகமான உறவைப் பேணவே முயன்றது. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த முயற்சிகளை பாகிஸ்தானே கெடுத்துக் கொண்டது.
ஜம்மு-காஷ்மீரில் இனி எந்த அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாநிலத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அரசு உறுதிபூண்டுள்ளது. மாநிலத்தில் சுமுகமான நிலை திரும்பி அமைதியான சூழல் உருவாவதற்கு பிடிபி கட்சியினரும் பாடுபட வேண்டும் என்றார் மெஹபூபா முஃப்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com