தில்லி ஐஐடி-யில் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன்!

ராஜஸ்தான் மாநிலம், கோடா மாவட்டத்தில் உள்ள சந்திரபுரா கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் கூலித் தொழிலாளி...
தில்லி ஐஐடி-யில் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன்!

ராஜஸ்தான் மாநிலம், கோடா மாவட்டத்தில் உள்ள சந்திரபுரா கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் கூலித் தொழிலாளி ஒருவரின் மகனான அபிஷேக் மீன், தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) சேர்ந்துள்ளார்.
இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஐஐடி நுழைவுத் தேர்வில் 257-ஆவது இடத்தைப் பெற்று, தில்லியில் உள்ள ஐஐடி-யில் இயந்திரவியல் பிரிவில் தொழில் உற்பத்திப் படிப்பில் அபிஷேக் சேர்ந்துள்ளதன் மூலம், சந்திரபுரா கிராமத்தில் இருந்து ஐஐடி-யில் சேர்ந்துள்ள முதல் மாணவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
சந்திரபுரா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஹிந்தி வழிக் கல்வி மூலம் நான் படித்தேன். பத்தாம் வகுப்புத் தேர்வில் 72 சதவீத மதிப்பெண்களைப் பெற்றேன். பின்னர், ஆசிரியர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்வதற்காக, கோட்டா நகருக்கு என் தந்தை அனுப்பி வைத்தார். அதற்குப் பிறகே, எனக்கு ஐஐடி பற்றி தெரியவந்தது.
ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே தனிப்பயிற்சி பெற்றேன். பன்னிரெண்டாம் வகுப்புக்கு சுயமாகவே படித்து, 83 சதவீத மதிப்பெண்களைப் பெற்றேன். எனக்குத் தேவையான பள்ளிப் பாடக் குறிப்புகளை ஆசிரியர்களும், சக மாணவர்களும் தந்துதவினார்கள்.
முதல்முறை நான் ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெற்றபோது, எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. எனினும், நான் தளர்வடையாமல் முயற்சித்தேன்.
என் தந்தை ராம்தயாளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிடைத்த கூலியும், விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானமும் எனது பயிற்சிக்குப் போதாததால், உள்ளூரில் 2 சதவீத வட்டிக்கு கடன் வாங்கி என்னைப் படிக்க வைத்தார்.
கிராமங்களில் ஏராளமான ஆற்றல்கள் உள்ளன. எனது பொறியியல் படிப்பின் மூலம் அவற்றை வெளிக்கொணர்வேன் என்றார் அபிஷேக் மீன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com