பாகிஸ்தானுடனான போர் கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும்

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள் என்பதால், போர் தொடுப்பது இந்தியாவின் கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.
பாகிஸ்தானுடனான போர் கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும்

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள் என்பதால், போர் தொடுப்பது இந்தியாவின் கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தில்லியில் சனிக்கிழமை கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன.
எனவே, பாகிஸ்தானுடனான போர் என்பதை கடைசி ஆயுதமாகத்தான் இந்தியா பயன்படுத்த வேண்டும். அதுவரை பேச்சுவார்த்தை மூலம் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தியாவின் நிலையான நட்பு நாடாகத் திகழும் ரஷியா தற்போது பாகிஸ்தானுடன் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்கிறது. இதுபோன்ற கவலையளிக்கக் கூடிய விவகாரங்களில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும். காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் நம் அனைவரையுமே கவலையடையச் செய்துள்ளன.
மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அந்த அரசுக்கு ஆதரவளிக்கும். பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பை நிரூப்பிக்கும் வலுவான ஆதாரங்களை நாம் கண்டறிந்து வெளியிட வேண்டும்.
உரி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு என பாகிஸ்தான் கூறுகிறது.
அந்த அமைப்பின் தலைவர் அஸார் மசூதை முந்தைய தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுதான் கடந்த 1999-ஆம் ஆண்டு விமானக் கடத்தல் சம்பவத்தின்போது விடுவித்தது. பயங்கரவாதிகள் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை என்றார் திக்விஜய் சிங்.
"பதிலடித் தாக்குதல் வேண்டும்': இதற்கிடையே, உரி தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மீது குறிப்பிட்ட வரம்பிலான தாக்குதல் நிகழ்த்தப்பட வேண்டும் என்று பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், அந்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான அமரீந்தர் சிங் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
18 வீரர்களின் இழப்பால், ராணுவத்தினரின் மன உறுதி குலையாமல் காக்க, உரி தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் இலக்குகள் மீது குறிப்பிட்ட வரம்புக்குள் தாக்குதல் நிகழ்த்தப்பட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com