18% ஜிஎஸ்டி வரி வரம்பை வலியுறுத்துங்கள்: காங்கிரஸ் முதல்வர்களுக்கு மேலிடம் அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி வரம்பை அதிகபட்சம் 18 சதவீதமாக நிர்ணயிக்கும்படி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்துமாறு...

சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி வரம்பை அதிகபட்சம் 18 சதவீதமாக நிர்ணயிக்கும்படி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்துமாறு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்கள் மற்றும் நிதியமைச்சர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சித் தலைமையகத்திலிருந்து, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும், நிதியமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விகிதத்தை 18 சதவீதமாக நிர்ணயிக்குமாறு அடுத்த கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே, பொது சந்தையை உருவாக்குவதும், உற்பத்தியாளர், நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருக்கும் வரிச் சுமையைக் குறைப்பதும் ஆகும்.
இந்த சூழலில் அதிக வரி விகிதத்தை நிர்ணயிப்பது அந்த நோக்கத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கருதுவதாகக் கூறப்படுகிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்குள் வருவாய் ஈட்டும் வணிகர்களுக்கு புதிய தேசிய விற்பனை வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்களில் இந்த உச்ச வரம்பை ரூ.10 லட்சமாகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதுதவிர, ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து வணிகர்களுக்கு விலக்கு அளிப்பதற்கான உச்ச வரம்புகள் குறித்தும், நிர்வாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறித்து அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைமை தனது கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்களுக்கும், நிதியமைச்சர்களுக்கும் இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com