ஆறுகளை நீர்வழித் தடங்களாக்கும் திட்டம்: தென் கொரியாவுடன் மத்திய அரசு பேச்சு

இந்திய ஆறுகளை நீர்வழித் தடங்களாக மேம்படுத்துவது குறித்து தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்திய ஆறுகளை நீர்வழித் தடங்களாக மேம்படுத்துவது குறித்து தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுகுறித்து கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நமது ஆறுகளை நீர்வழித் தடங்களாக்குவதற்காக, தென் கொரிய அரசு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
நாட்டின் 111 ஆறுகளில், அவர்களுக்கு விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மாற்ற அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த நீர்வழித் தடங்கள் மூலம் வருவாய் கிடைக்கத் தொடங்கிய பிறகு, 15 முதல் 20 ஆண்டுகளில் அவர்களது முதலீடு திரும்பி அளிக்கப்படும் என்று யோசனையை பேச்சுவார்த்தையில் முன்வைத்துள்ளோம்.
ஏற்கெனவே, 7,500 கி.மீ. நீளமுள்ள நாட்டின் கடலோரப் பகுதியை, போக்குவரத்துக்கான வழித்தடங்களாகப் பயன்படுத்தும் திட்டத்தை, கப்பல் கட்டும் துறையில் முன்னிலை வகிக்கும் தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. தற்போது நாட்டின் போக்குவரத்தில் 3.5 சதவீதமே நீர்வழியாக நடைபெறுகிறது. ஆனால், சீனாவில் 47 சதவீதப் போக்குவரத்தும், ஐரோப்பாவில் 40 சதவீதப் போக்குவரத்தும் நீர்வழியாக நடைபெறுகின்றன.
ஜப்பான் மற்றும் கொரியாவில் 44 சதவீதம், வங்கதேசத்தில் 35 சதவீதம் போக்குவரத்து நீர்வழியாக நடைபெறுகிறது.
இந்தியாவில் நீர்வழித் தடங்களை முறைப்படி மேம்படுத்தினால், அது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, சிக்கனமான போக்குவரத்துக்கு வழிவகுக்கும்.
அது இந்தியப் பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் என்றார் நிதின் கட்கரி.
நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, ஆறுகளை பொருள்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கான நீர்வழித் தடங்களாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதற்காக, நாடு முழுவதும் உள்ள 111 ஆறுகளை நீர்வழித் தடங்களாக மேம்படுவத்துவதற்கான மசோதா இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com