காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள், அமைதியை விரும்புகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள், அமைதியை விரும்புகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
"மனதின் குரல்' என்ற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மாதந்தோறும் உரையாற்றி வரும் அவர், ஞாயிற்றுக்கிழமை தனது உரையில் மேலும் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 18 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அந்த கோழைத்தனமான தாக்குதல், ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கிவிட்டது. இந்தச் சம்பவம், ஒரு பக்கம் துயரத்தையும், மற்றொரு பக்கம் கோபத்தையும் வரவழைத்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவம், மகன்கள், சகோதரர்கள், கணவர்கள் ஆகியோரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. இது, ஒட்டுமொத்த தேசத்துக்கே ஏற்பட்ட இழப்பாகும். இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பதை மீண்டும் கூறுகிறேன்.
மக்களும், அரசியல் தலைவர்களும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களது செயல்கள் குறித்துப் பேசுகின்றனர். ஆனால், நமது ராணுவத்தினர் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது செயல்களை துணிச்சலுடன் வெளிப்படுத்துகிறார்கள். அனைத்து விதமான சதிகளையும் துணிவோடு முறியடிக்கும் திறமை இந்திய ராணுவத்துக்கு உள்ளது. அவர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
மாணவருக்குப் புகழாரம்: உரி பயங்கரவாதத் தாக்குதலால் ஆத்திரமடைந்த 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறார். நீண்ட நேர யோசனைக்குப் பிறகு, தினமும் 3 மணி நேரம் கூடுதலாகப் படித்து, நாட்டுக்குப் பங்காற்ற வேண்டும் என்று
அந்த மாணவர் முடிவு செய்திருக்கிறார். அவரது ஆக்கப்பூர்வமான சிந்தனையைப் பாராட்டுகிறேன்.
இதேபோல், நாட்டு மக்கள் ஏராளமானோர் தற்போது கோபத்துடன் உள்ளனர். இது, அவர்கள் விழித்துக் கொண்டதைக் காட்டுகிறது.
கடந்த 1965-ஆம் ஆண்டில் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் மூண்டது. அப்போது, "ஜெய் ஜவான், ஜெய் கிஸான்' (போர் வீரர்கள் வாழ்க - ஏர் வீரர்கள் வாழ்க) என்ற முழக்கத்துடன் நாட்டு மக்களை லால் பகதூர் சாஸ்திரி ஒருங்கிணைத்தார்.
அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட அதே கோப உணர்வு, மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. தேசியம் என்ற உணர்வுடன், நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொருவரும் உள்ளனர்.
மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போதெல்லாம், சமூகத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதேபோல், தேசியம் உணர்வுடன் அரசும், மக்களும், ராணுவமும் ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபட வேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: காஷ்மீர் மக்கள், சமூக விரோதச் சக்திகளை இனங்கண்டு புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். உண்மை நிலையைப் புரிந்துகொண்ட அவர்கள், அந்தச் சக்திகளிடம் இருந்து விலகி, அமைதி வழியில் பயணிக்கத் தொடங்கி விட்டனர்.
காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முறையாகச் செயல்பட வேண்டும் என்பது அனைத்து பெற்றோரின் விருப்பமாக உள்ளது. விளைபொருள்கள் சந்தையைச் சென்றடைய வேண்டும் என்பது விவசாயிகளின் விருப்பமாக உள்ளது.
காஷ்மீரில் கடந்த சில நாள்களாக வர்த்தக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. பொருளாதார நடவடிக்கைகள் முறையாக நடைபெற வேண்டும். அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவை நமது பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், வளர்ச்சியை எட்டுவதற்குமான வழிகளாகும்.
காஷ்மீர் மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதேசமயம் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். மற்றொரு புறம், பாதுகாப்புப் படையினர் அதிகாரத்தையும், சட்டத்தையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று மோடி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com