தெலங்கானாவில் தொடர் மழை: பலி 11-ஆக உயர்வு

தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் பெருமழை காரணமாக வெள்ளக்காடாகியுள்ள ஏடுபாளையம் கிராமம். நாள்: ஞாயிற்றுக்கிழமை.
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் பெருமழை காரணமாக வெள்ளக்காடாகியுள்ள ஏடுபாளையம் கிராமம். நாள்: ஞாயிற்றுக்கிழமை.

தெலங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
தெலங்கானாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் அனைத்து இடங்களிலும் வெள்ள தண்ணீர் தேங்கியுள்ளது. மேடக் மாவட்டத்தில் மழையால் வீடு இடிந்தது உள்ளிட்ட சம்பவங்களில் வெள்ளிக்கிழமை 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
மழை தொடர்பான சம்பவங்களில் இதே மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் சனிக்கிழமை பலியாயினர். இதனிடையே, மேடக்கின் ஜக்காபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சனிக்கிழமை தனது அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரெட்டிகானாப்பூர் கிராமத்தில், பஸ்பலேரு ஏரி அருகே தரைப்பாலத்தைக் கடந்தபோது அவர் இரு சக்கர வாகனத்துடன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவருடன் சேர்த்து மேடக்கில் பலியானோரின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. இந்நிலையில், வாரங்கல் மாவட்டத்தில் மழைக்கு 3 பேர் பலியாகி விட்டனர்.
பெருமழையால் ஹைதராபாதிலும் தெலங்கானாவின் மற்ற பகுதிகளிலும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதற்காக கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஹைதராபாதில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பொட்டம்ஷெட்டிபள்ளி கிராமத்தில் மேம்பாலம் கட்டும் பணியில் ஒடிஸா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 23 கட்டடத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மஞ்சீரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அங்கிருந்து வெளியேற முடியாமல் தேகுலகட்டா தீவில் அவர்கள் 36 மணிநேரமாக சிக்கித் தவித்து வந்தனர்.
அவர்கள் அனைவரையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இரு ஹெலிகாப்டர்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்டனர்.
வெள்ள அபாயம்: மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கிருஷ்ணா, கோதாவரி ஆகிய நதிகள் பாயும் பகுதிகளைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 550-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரைக் கொண்ட 17 தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார்நிலையில் உள்ளனர்.
ஆந்திர முதல்வர் ஆய்வு: கனமழையால் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் பல்நாடு பகுதி மிகவும் பாதிப்படைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு விமானம் மூலம் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் உறுதியளித்தார். பெருமழை காரணமாக குண்டூர் மாவட்டத்தில் 41,000 ஹெக்டேருக்கு மேல் நெல், மிளகாய், பஞ்சு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com