மகாநதி நீர்ப் பங்கீடு, போலாவரம் பிரச்னைகளில் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்

மகாநதி நீர்ப் பங்கீடு, போலாவரம் அணைத் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளில் நீதி கிடைக்கும் வரை ஒடிஸாவின் போராட்டம் தொடரும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.
மகாநதி நீர்ப் பங்கீடு, போலாவரம் பிரச்னைகளில் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்

மகாநதி நீர்ப் பங்கீடு, போலாவரம் அணைத் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளில் நீதி கிடைக்கும் வரை ஒடிஸாவின் போராட்டம் தொடரும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.
பிஜு ஜனதாதளம் சார்பில் அக்டோபர் 2 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஒரு மாதகால நடைப் பயணத்துக்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் நவீன் பட்நாயக் தலைமையில் புவனேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் ஒடிஸா மக்களின் மீது அக்கறை கிடையாது. பாமர மக்களைக் காட்டிலும் அவர்களது கட்சியின் நலனே அவர்களுக்கு முக்கியம். ஒடிஸாவை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
மத்திய அரசின் புறக்கணிப்பு மாநிலத்தின் மேம்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. போலாவரம் அணைத் திட்டம், மகாநதி நீர்ப் பங்கீட்டு விவகாரங்களில் மத்திய அரசு ஒடிஸாவுக்கு எதிரான போக்கையே கடைப்பிடித்து வருகிறது. இதை அனைவரும் அறிந்ததே.
மத்திய நிதி நிறுத்தம்: எட்டு நலத் திட்டங்களுக்கு மத்திய நிதியுதவி நிறுத்தப்பட்டு விட்டது. ஒடிஸாவில் பெரும்பாலான மக்கள் அரிசியை விரும்பி உண்ணும்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரிசிக்குப் பதிலாக கோதுமையை எடுத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு நெருக்கடி தருகிறது.
அதேபோல எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ஆதார் எண் அடையாளம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை யாவும் ஒடிஸா நலனுக்கு எதிரானவை. மேலும் இதுபோன்ற முடிவுகள் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு முரண்பாடானவை.
வரும் அக்டோபர் மாதத்தை அதிகாரமளித்தல் மற்றும் விழிப்புணர்வு மாதமாக பிஜு ஜனதாதளம் அனுசரிக்கவிருக்கிறது. ஆண்டுதோறும் மகாத்மா காந்தி பிறந்த தினம் (அக்.2) முதல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த தினம் (அக்.11) வரை பிஜு ஜனதாதளம் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பிஜு பட்நாயக் பிறந்த தின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த நடைப்பயணம் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது என்றார் நவீன் பட்நாயக்.
இதற்கிடையில் ஆந்திர அரசு கோதாவரி அணையின் குறுக்கே மேற்கொண்டு வரும் போலாவரம் அணைத் திட்டத்தைக் கண்டித்து ஒடிஸாவின் கந்தமால், கஞ்சாம், கஜபதி, மல்கான்கிரி, காலாஹண்டி, கோராபுட், ராயகடா ஆகிய 7 தென் மாவட்டங்களில் வரும் அக்.1ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக பிஜு ஜனதாதளம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com