முஸ்லிம்கள் நமது சகோதரர்கள்: மோடி

முஸ்லிம்களை நமது சகோதரர்களாக கருத வேண்டும் என்று பாஜக தேசியக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
முஸ்லிம்கள் நமது சகோதரர்கள்: மோடி

முஸ்லிம்களை நமது சகோதரர்களாக கருத வேண்டும் என்று பாஜக தேசியக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பாஜக தேசியக் குழு கூட்டம் கடந்த இருநாள்களாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதுதான் அரசின் லட்சியமாக உள்ளது. இது வெறும் அரசியல் கோஷமல்ல. சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் மக்களையும் அரசின் நலத்திட்டங்களும், பொருளாதார வளர்ச்சியின் பயன்களும் சென்றடைய வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளோம்.
முஸ்லிம்களுக்கு அங்கீகாரம்: தற்காலத்தில் பல விஷயங்களுக்கு இலக்கணமே மாறிவிட்டது. எனவேதான் தேசியவாதம் என்பது சாபமாக கருதப்படும் சூழல் நிலவுகிறது. ஜனசங்கத்தை உருவாக்கியவரும், நாட்டுக்குத் தொண்டாற்றியவருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் கருத்தை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். "முஸ்லிம்களைப் பாராட்டவும் வேண்டாம், குறைகூறவும் வேண்டாம். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்' என்பதே அவரது கருத்து.
யாரும் அன்னியர்கள் இல்லை:
தேர்தலின்போது வாக்குகளைப் பெறுவதற்கான கருவியாக முஸ்லிம்களைப் பயன்படுத்தக் கூடாது; வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொள்ளக் கூடாது. முஸ்லிம்களை நமது சகோதரர்களாகக் கருத வேண்டும். நம்மில் யாரும் அன்னியர்கள் இல்லை. இதுதான் நமது அரசியல் கொள்கை. ஜனசங்கம் தொடங்கியதில் இருந்து இப்போதுவரை நமது இயக்கம் கொள்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்துகொண்டதில்லை.
அனைத்துக் கட்சியிலும் நல்லவர்கள் உண்டு: நமது கட்சித் தலைவர்கள் தங்களது சிறப்பான நடத்தை மூலம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இதுதான் தீனதயாள் உபாத்யாயவுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும். அனைத்து அரசியல் கட்சிகளிலும் நல்லவர்கள் உள்ளனர். எனினும், பாஜகவில் இந்த எண்ணிக்கை அதிகம். ஏனெனில் பாஜக கொள்கைப் பிடிப்புள்ள கட்சி. நாட்டின் அனைத்துப் பகுதியிலும் ஒரே சீரான வளர்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேர்தல் சீர்திருத்தம்: தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து விரிவான ஆலோசனையை மேற்கொள்ள வேண்டிய காலம் நெருங்கியுள்ளது. தேர்தலில் பண பலத்தைப் பயன்படுத்துவது, அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்து என பல்வேறு தவறுகள் நடக்கின்றன. இதனைத் தடுக்க தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சிகள் என்னிடம் வலியுறுத்தி வருகின்றன.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்: நமது தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கவும், நல்ல விஷயங்களைச் சேர்க்கவும் இப்போது காலம் கனிந்து வருகிறது. ஒவ்வொரு தனமனிதரின் வாக்குரிமையும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நமது நாட்டில் ஆரோக்கியமான ஜனநாயகம் இருக்கும் என்றார் மோடி.
நிகழ்ச்சியில் தீனதயாள் உபாத்யாயவின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஓராண்டு தொடர் கொண்டாட்ட நிகழ்ச்சியையும் மோடி தொடங்கிவைத்தார்.
கம்யூனிஸ்டுகளுக்கு கண்டனம்: கேரளத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மீது தாக்குதல்களை நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பெயர் குறிப்பிடாமல், மோடி கண்டித்துப் பேசினார். சங்கபரிவார தொண்டர்களின் உயிர்த்தியாகம் குறித்த புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
அப்போது மோடி கூறியதாவது: மாற்றுக் கருத்து உள்ளவர்கள் என்பதற்காக தாக்கப்படுவதை யாராலும் ஏற்க முடியாது. இது ஜனநாயகத்துக்கான பாதையல்ல. கேரள பாஜகவினர் மிகப்பெரிய தியாகங்களைச் செய்துள்ளனர். கேரளத்தில் நடைபெறும் அரசியல் வன்முறை குறித்து தேசிய அளவில் விவாதிக்க வேண்டும். கேரளத்தில் அரசியல் வன்முறைக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி.

பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு அக். 2-இல் ஒப்புதல்

பருவநிலை மாற்ற ஒப்பந்தம் குறித்து பாஜக தேசியக் குழு கூட்டத்தில் மோடி பேசியதாவது:
பாரீஸ் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு காந்தி ஜெயந்தி தினமான வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்படும்.
புவி வெப்பமயமாவதால் கடற்கரைப் பகுதி நகரங்களுக்கும், நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க கார்பன்-டை-ஆக்ûஸடு உள்ளிட்ட வாயுக்கள் வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவது அவசியம். இதற்காக பருவநிலை மாற்ற ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றார் மோடி.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் 190-க்கும் மேற்பட்ட நாடுகள் புவி வெப்பமயமாவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புக்கொண்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com