உரி தாக்குதல் சம்பவம் இந்தியாவே அரங்கேற்றிய சதி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி ராணுவ முகாமில் 18 இந்திய வீரர்களின் உயிரிழப்புக்குக் காரணமான தாக்குதல் சம்பவம்,
உரி தாக்குதல் சம்பவம் இந்தியாவே அரங்கேற்றிய சதி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி ராணுவ முகாமில் 18 இந்திய வீரர்களின் உயிரிழப்புக்குக் காரணமான தாக்குதல் சம்பவம், இந்திய அரசே திட்டமிட்டு அரங்கேற்றிய சதி என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறினார்.
இதுதொடர்பாக, பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் "டான்' பத்திரிகைக்கு அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலில் பாகிஸ்தானை சிக்கவைப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இந்தியாவுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அந்தத் தாக்குதல் சம்பவம், இந்தியாவே திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகும்.
ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னையைத் தீர்ப்பதில் பாகிஸ்தான் அளவுக்கு இந்தியா அக்கறை செலுத்தவில்லை என்பதை உலகமே அறியும். பாகிஸ்தானுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இந்தியா சுமத்தி வந்தபோதிலும், எந்தவொரு நாட்டின் ஆதரவும் அந்நாட்டுக்கு கிடைக்கவில்லை. அதேசமயம், பாகிஸ்தானின் நிலைப்பாட்டை சீனா ஆதரித்துள்ளது.
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதேபோன்று, ஒவ்வொரு நாட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான சக்திகள் உள்ளன. ஆனால், அந்தந்த நாட்டின் கொள்கைகளுக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கைகளுக்கு வரவேற்பு இருக்கும்.
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கக்கோரி 5 அல்லது 10 பேர் மட்டுமே குரல் எழுப்பினால் போதாது என்றார் அவர்.
உரி தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக இந்திய அரசு கூறிவருகிறது. மேலும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உரி தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளில் ஒருவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாஃபராபாதைச் சேர்ந்த ஹஃபீஸ் என்பது தெரியவந்துள்ளது.
தீவிர கண்காணிப்பு: இதனிடையே, எந்தவொரு அத்துமீறலையும் எதிர்கொள்ளும் வகையில் பாகிஸ்தானின் கிழக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆஸிம் சலீம் பஜ்வா கூறினார்.
மேலும், எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் யாராவது நடமாடுகிறார்களா? என்பதைக் கண்காணிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com