முன்னாள் மத்திய அரசு உயரதிகாரி மகனுடன் தூக்கிட்டுத் தற்கொலை

லஞ்ச வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை எதிர்கொண்டு வந்த முன்னாள் மத்திய அரசு உயரதிகாரி பி.கே. பன்சால், அவரது மகன் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
முன்னாள் மத்திய அரசு உயரதிகாரி மகனுடன் தூக்கிட்டுத் தற்கொலை

லஞ்ச வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை எதிர்கொண்டு வந்த முன்னாள் மத்திய அரசு உயரதிகாரி பி.கே. பன்சால், அவரது மகன் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லியைச் சேர்ந்தவர் பி.கே. பன்சால் (60). இவர் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், விதிமீறல் புகாருக்கு உள்ளான மும்பையைச் சேர்ந்த ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக ரூ.9 லட்சம் லஞ்சம் பெற்றதாக பன்சாலை ஜூலை 16-ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறையினர் (சிபிஐ) கைது செய்தனர். மேலும், அவருக்கு நெருக்கமான எட்டு இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பணம் மீட்கப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான பன்சால் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, ஜூலை 19-ஆம் பன்சாலின் மனைவி சத்யபாலா (57), மகள் நேஹா (27) ஆகியோர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், கிழக்கு தில்லியில் உள்ள நீல்கண்ட் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த பன்சாலும், அவரது மகன் யோகேஷும் (30) செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தனித்தனி அறைகளில் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததாக அவரது வீட்டுப் பணிப்பெண் ரச்னா போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, தற்கொலைக்கான காரணம் குறித்த இருவரின் கடிதங்களை போலீஸார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களும் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சிபிஐ அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்தியது, தான் கைது செய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் பன்சாலும், அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ அதிகாரி விளக்கம்: இந்நிலையில், மத்திய புலனாய்வுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஆர்.கே. கௌர் கூறியதாவது: லஞ்ச புகாரில் ஜூலை 16ஆம் தேதி பி.கே. பன்சால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கமான ஜாமீனில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பன்சாலும் அவரது மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். லஞ்சப் புகார் வழக்கில் பன்சாலின் மகன் குற்றம்சாட்டப்படவில்லை. சிபிஐ விசாரணைக்கும் அவர் அழைக்கப்படவில்லை' என்றார் கௌர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com