பாகிஸ்தான் முகாம்களில் தாக்குதல்: ராணுவத்துக்கு பாஜக, காங்கிரஸ் பாராட்டு

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நிகழ்த்திய இந்திய ராணுவத்துக்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நிகழ்த்திய இந்திய ராணுவத்துக்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து பாஜக தலைவர் அமித் ஷா கூறுகையில், பயங்கரவாதிகளை விருத்தி செய்யும் மையங்களைத் தாக்கியதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ராணுவம் தனது வீரத்தை நிரூபித்துக் காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ""பயங்கரவாதத்துடன் மிக நீண்டகாலமாகப் போரிட்டு வருகிறோம். ஆனால் தற்போதுதான் முதல்முறையாக மிகத் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார் அவர்.
இத்தாக்குதல் குறித்து பாஜக தேசியச் செயலர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது:
பாகிஸ்தானின் பயங்கரவாதத்திலிருந்து நமது எல்லைகளைப் பாதுகாக்கும் ராணுவத்தினருக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கும் தலைவணங்குகிறோம்.
பொறுப்பான அரசு என்றால் பேச்சு குறைவாகவும், செயல் அதிகமாகவும் இருக்கும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு அதைத்தான் செய்து வருகிறது என்றார் அவர்.
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனது சுட்டுரைப் பதிவில், "இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்புவதை நிறுத்துமாறு பல முறை கூறியும் திருந்தாத பாகிஸ்தான் மீது நுணுக்கத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ், தனது சுட்டுரைப் பதிவுகளில் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி சொல்வதைச் செய்பவர். எல்லைக்கு அப்பாலிலிருந்து இந்தியாவில் பயங்கரவாதத்தைத் தூண்டி விடுபவர்களுக்கு தண்டனை அளிக்கும் காலம் தொடங்கிவிட்டது. இந்தியாவின் தாக்குதல் நுணுக்கத் தாக்குதல் இல்லை எனவும், அது வெறும் எறிகுண்டுத் தாக்குதல் எனவும் பாகிஸ்தானில் சிலர் கூறி வருகின்றனர்.
பிறகு ஏன் பாகிஸ்தான் அதிபர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் என அனைவரும் பாகிஸ்தானை இந்தியாவிடமிருந்து பாதுகாப்போம் என்று சூளுரைக்கின்றனர்?
ராணுவம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று அந்தப் பதிவுகளில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பாராட்டு: இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் கூறியதாவது: பயங்கரவாத முகாம்கள் மீது நுணுக்கத் தாக்குதல் நிகழ்த்தியுள்ள ராணுவத்துக்கு வாழ்த்து
களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய ராணுவத்துக்கு எங்களது முழு ஆதரவு எப்போதும் உண்டு என்றார் அவர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நிகழ்த்தியுள்ள ராணுவத்துக்கு எங்களது இதயபூர்வமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். ராணுவ வீரர்களின் வீரத்துக்குத் தலைவணங்குகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com