எதிர்க்கட்சியினர் இல்லாதபோது மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம்

வெள்ளிக்கிழமைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நேரமாகப் பார்த்து மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

வெள்ளிக்கிழமைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நேரமாகப் பார்த்து மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அலுவல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பிரச்னை ஒன்றை எழுப்பினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை பிற்பகலில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
அண்மையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இல்லாத நேரத்தில் எதிரி சொத்துகள் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது.
முன்னதாக, மாநிலங்களவையின் அலுலல் ஆய்வுக் குழுவில் இந்த மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்து உருவாகாதவரை, அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், மத்திய அரசு இதை மீறிவிட்டது. மாநிலங்களவையில், பொதுவாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனிநபர் மசோதாக்கள் எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். அவற்றின் மீதான விவாதத்துக்குப் பின், எதிரி சொத்துகள் மசோதா எடுத்துக் கொள்ளப்பட உள்ளது குறித்து எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.
இதற்கு மறுப்புத் தெரிவித்து நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது எனது பணியல்ல. அந்த குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை, தனிநபர் மசோதா எதுவும் இல்லாத காரணத்தால் தான் எதிரி சொத்துகள் மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.
அப்போது, அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் குறுக்கிட்டு பேசுகையில், "வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன் தனிநபர் மசோதாக்கள் மீதான விவாதம் முடிவடைந்தாலோ அல்லது அத்தகைய மசோதாக்கள் எதுவும் இல்லாமலிருந்தாலோ, பட்டியலில் காணப்படும் அடுத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com