நெடுஞ்சாலை 'டாஸ்மாக்' கடைகளுக்கு எதிரான தீர்ப்பு: முதல் பெருமை யாருக்கு? புதிய சர்ச்சை

நெடுஞ்சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை  மாற்ற மேலும் அவகாசம் தர முடியாது என்று உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
நெடுஞ்சாலை 'டாஸ்மாக்' கடைகளுக்கு எதிரான தீர்ப்பு: முதல் பெருமை யாருக்கு? புதிய சர்ச்சை


சென்னை: நெடுஞ்சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை  மாற்ற மேலும் அவகாசம் தர முடியாது என்று உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பின் பின்னணியில் இருப்பது தமிழகம். பாமக வழக்குரைஞர் பாலு தொடர்ந்த வழக்கில் தான் இந்த தீர்ப்புக்கான அஸ்திவாரம் ஆரம்பமாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்மன் சித்து என்ற மாற்றுத் திறனாளியின் வெற்றியாகவும், அவரது முயற்சியாகவும்  சொல்லப்படுகிறது. அதில் தவறும் இல்லை. இந்த வழக்கில் அவருக்கு நிச்சயம் பங்கு இருக்கிறது. அதை மறுக்கவே முடியாது.

ஆனால், பாமக வழக்குரைஞர் பாலுவின் மனு தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பமாக இருந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட முதல் வழக்கும், முதன்மை வழக்கும் பாமக  வழக்குரைஞர் பாலுவின் வழக்குதான். அதில் பெற்ற தீர்ப்பை எதிர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதாவது, சென்னை  உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக பாலு வழக்குத்தொடர்ந்தது 2012ம் ஆண்டு, தீர்ப்பு வெளியானது 25.02.2013. ஹர்மன் சித்து பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது 2013ம் ஆண்டு, தீர்ப்பு வந்தது 18.03.2014.

பாலு தாக்கல் செய்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதில் பாலுவுக்கே வெற்றி கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடக் கோரி பாலு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது, பஞ்சாப்பை சேர்ந்த ஹர்மன் சித்துவின் வழக்கும் விசாரணைக்கு வந்தது. எனவே, பாலு - தமிழக அரசுக்கு எதிரான வழக்கில் ஹர்மன் சித்துவின் வழக்கும் இணைக்கப்பட்டுள்ளது. முதன்மை வழக்காக பாலுவின் வழக்கே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பின்னணி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று பாமகவைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் 2013-இல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதற்கிடையே, இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. மேலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள் வைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி மதுபானக் கொள்கையை வகுக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை மதுபானக் கடைகளை அகற்ற உத்தரவிட்டதை போல, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் அகற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாலு மனு தாக்கல் செய்தார். இதுபோன்ற கோரிக்கைகளைக் கொண்ட பிற பொது நல மனுக்களையும் சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பை உச்ச நீதிமன்றம்  ஒத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.பாலு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி, அரசு வழக்குரைஞர் பாலாஜி ஆகியோர், நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதில் உள்ள சிரமங்களை விளக்கினர்.

குறிப்பாக, "மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 1,000 டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் பேரூராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றின் வரம்புக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ளன. அந்தக் கடைகளை அகற்றினால் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள், கல்வி நிலையங்கள், கோயில்கள் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளிலேயே திறக்க வேண்டிய நிலைமை உருவாகும். அங்கும் மனுதாரர் குறிப்பிடும் பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது' என்று தமிழக அரசு வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டினர்.

இதே கருத்தை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஆமோதித்தனர்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "தேசிய நெடுஞ்சாலைக்கு பொருந்தக் கூடிய விஷயங்கள் அனைத்தும் மாநில நெடுஞ்சாலைகளுக்கும் பொருந்தும். தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள் பார்வைக்கு எட்டாத வகையிலும், நேரடியாக அணுக முடியாத வகையிலும், சற்று தொலைவில் இருப்பதும் அவசியம்' என்று குறிப்பிட்டனர்.

பின்னர், இந்த விவகாரத்தில் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடையை அகற்ற அவகாசம் தர முடியாது என்று மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்தே, கடந்த சனிக்கிழமை முதல் தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபானக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் டாஸ்மாக் கடைகள் மூடப்பட யார் காரணம்? யாருக்கு இந்த பெருமை சேரும் என்று புதிய சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

நரேன் சித்துவின் வழக்குகள்



பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்மன் சித்து. தேசிய மற்றும் மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உத்தரவிடக் கோரி, அறக்கட்டளை அமைப்பான அரைவ்சேஃப் என்ற அமைப்பின் பெயரில், பஞ்சாப் மற்றும் அரியான நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றுமாறு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் பாலு தொடர்ந்த வழக்கில் பெற்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் மீது விசாரணை நடந்து கொண்டிருந்ததால், அதோடு சித்துவின் வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com