பயங்கரவாதத்தை விட மோசமானது காதல்தான்: புள்ளி விவரம் சொல்கிறது

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட, காதல் தொடர்பான விஷயங்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகம்.
பயங்கரவாதத்தை விட மோசமானது காதல்தான்: புள்ளி விவரம் சொல்கிறது


புது தில்லி: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட, காதல் தொடர்பான விஷயங்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை 6 மடங்கு அதிகம்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் எப்போதும் நாளிதழ்களில் முதல் இடத்தைப் பிடித்து விடுகிறது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் காதல் மற்றும் அது தொடர்பான பிரச்னைகளில் ஏற்படும் மரணங்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ளது அதிர்ச்சியூட்டுகிறது.

2001ம் ஆண்டு முதல் 2005 வரை காதல் தொடர்பான பிரச்னைகளில் கொலையாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,585 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வெறும் பதிவான புள்ளி விவரம் மட்டுமே. (பதிவாகாதது எவ்வளவோ?) அரசு வழங்கும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79,189. மேலும் 2.6 லட்சம் பேர் கடத்தப்பட்டிருப்பதாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளது. கடத்தல் வழக்குகளில், திருமணம் செய்வதற்காக பெண்கள் கடத்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

காதல் எனும் உணர்வு இரண்டு பக்கமும் இல்லாத நிலையிலோ, ஒருவர் மற்றொருவரை ஏமாற்றும் போதோ இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் மாதற்தோறும் சராசரியாக 7 கொலைகள், 14 தற்கொலைகள், 47 கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில், பயங்கரவாதத்தால் பொதுமக்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் என சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் காதல் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியாக 6 மடங்கு அதிகம்.

காதல் அசம்பாவிதங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதில், காதலை ஏற்க மறுத்தப் பெண்ணைக் கொலை செய்வது, காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வது, ஏமாற்றத்தால் காதலனோ, காதலியோ தற்கொலை செய்து கொள்வது, காதல் திருமணம் செய்தவர்கள், கௌரவத்துக்காக கொலை செய்யப்படுவது என அனைத்தும் அடங்கும்.

இது குறித்து ஆய்வுமேற்கொண்டுவரும் பேராசிரியர் உமா சக்ரவர்த்தி, ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "உண்மையில் காதல் உயிரிழப்பு சம்பவங்களில் மேற்கு வங்கம்தான் முதல் இடத்தில் இருக்கும். ஆனால், 2012ம் ஆண்டுக்கான தகவல் கிடைக்கவில்லை. எனவே, இந்த 14 ஆண்டுகளில் மட்டும் 15 ஆயிரம் தற்கொலைகள் நடந்துள்ளன. இதற்கு அடுத்து தமிழ்நாடு 9,405 தற்கொலைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் தான் அசாம், ஆந்திரம், ஒடிசா, மத்தியப் பிரதேசம் உள்ளன" என்று கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com