ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ரத்தாகுமா?: தலைமைத் தேர்தல் ஆணையம் நாளை முடிவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி வாக்காளர்களைக் கவர்வதற்குப் பெருமளவில் பணப் பட்டுவாடா
ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ரத்தாகுமா?: தலைமைத் தேர்தல் ஆணையம் நாளை முடிவு

புதுதில்லி: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி வாக்காளர்களைக் கவர்வதற்குப் பெருமளவில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக வரும் புகார்களைத் தொடர்ந்து அத்தேர்தலை ரத்து செய்வதா அல்லது தள்ளிவைப்பதா என்பது குறித்து தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த தேர்தல் ஆணைய செலவினங்கள் பிரிவு இயக்குநர் விக்ரம் பாத்ரா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் ஆளும் அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் தேர்தல் ஆணைய அனுமதியுடன் மத்திய வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம், சொத்து ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வருமான வரித் துறை கைப்பற்றியதாகக் கூறப்படும் சில ஆவண நகல்களில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் பணம் பட்டுவாடா தொடர்பாக வருமான வரி துறையினர் ஆவணம் வெளியிட்டது.  மேலும் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பதற்காக யாருக்கு எந்தெந்த வார்டு, வட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் வழங்க வேண்டிய தொகை உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாகத் தெரிகிறது. மொத்தம் 89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கணக்கிடப்பட்டிருந்தது.

இது பற்றி விவரம் செய்தித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின. இந்த ஆவணங்கள் வருமான வரித் துறையிடம் இருந்து எவ்வாறு ஊடகங்களிடம் கசிந்தன என்பது குறித்து அத்துறை சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பான ஆவணங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா செய்த ஆவணங்கள் கிடைத்ததால் தேர்தல் நடந்தும் செல்லாது என ரத்து செய்யப்பட்டது. இது போல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்வதா, தள்ளிவைப்பதா அல்லது திட்டமிட்டபடி ஏப்ரல் 12-இல் நடத்துவதா என்பது குறித்து நாளை திங்கள்கிழமை மாலை (ஏப்ரல் 10) 4.30 மணியளவில் நடத்தப்படும் ஆலோசனைக்கு பின்னரே தனது முடிவை நஜீம் ஜைதி அறிவிப்பார் என தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com