ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதாவானது மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

புதுதில்லி: மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதாவானது மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு அந்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர், அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, 28 ஆண்டுகளுக்கு பின் இந்த மசோதாவானது மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதாவை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார்.
இந்த சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாவன:
மூன்றாம் நபர் காப்பீட்டு வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழப்பு ஏற்படும்பட்சத்தில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், கடுமையான காயங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த இழப்பீட்டு தொகையானது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் வழங்கப்படும்.
அதேபோல், அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படும்பட்சத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தற்போது நடைமுறையில் உள்ளதைவிட எட்டு மடங்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊழலை ஒழிக்கும் வகையில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுக்கான நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com