பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம்: பொதுவாக எழும் 10 சந்தேகங்களும் பதில்களும்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, நாள்தோறும் பெட்ரோல், டீசலுக்கு விலை நிர்ணயம் செய்யும் நடைமுற வரும் மே மாதம் 1-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம்: பொதுவாக எழும் 10 சந்தேகங்களும் பதில்களும்!


புது தில்லி:  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, நாள்தோறும் பெட்ரோல், டீசலுக்கு விலை நிர்ணயம் செய்யும் நடைமுற வரும் மே மாதம் 1-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது.

இந்த புதிய நடைமுறை 5 நகரங்களில் முதல்கட்டமாக அமலுக்கு வரவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு எழும் சந்தேகங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தற்போது பெட்ரோல், டீசல் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

இந்தியாவில் முன்பு பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசிடமே இருந்தது. இந்நிலையில், பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனத்திடம் மத்திய அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு ஜுன் மாதம் அளித்தது. இதேபோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்படைத்தது.

அதன்படி, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, இந்தியாவில் மாதந்தோறும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஆனால், விலையை மாற்றியமைப்பதற்கு முன்பு மத்திய அரசிடம் எண்ணெய் நிறுவனங்கள் கலந்தாலோசனை நடத்த வேண்டும்.

தினசரி பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

இல்லை. விலை உயர்வாக இருந்தாலும், குறைந்தாலும், அது அன்றைய தினத்துக்கான விலை மட்டுமே. மேலும், தினசரி விலை நிர்ணயம் செய்யப்படும் போது, அது ஒரு சில பைசாக்களாக மட்டுமே இருக்க வாய்ப்பு உண்டு. அதனால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இந்தியாவில் முதலில் எங்கெங்கு இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது?

முதலில், புதுச்சேரி, ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ராஜஸ்தானின் உதய்ப்பூர், ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர், சண்டீகர் ஆகிய 5 நகரங்களில் நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறை  சோதனை முறையில் அமல்படுத்தப்படவுள்ளது.

தனியார் பெட்ரோல் நிலையங்கள் என்ன செய்யப் போகின்றன?

இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. ஒவ்வொரு தனியார் பெட்ரோலிய நிறுவனங்களும், அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விலைக் கொள்கையில் இந்த மாற்றம் கொண்டுவரக் காரணம்?

பெட்ரோல், டீசல் விலை என்பது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அமைக்கப்படுவது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் அதில் ஒன்று. இதர வரிகள், சுத்திகரிக்க, பெட்ரோல் நிலையங்களுக்குக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து, சந்தைப்படுத்துதல் போன்றவற்றுக்கான கட்டணமும் சேர்ந்தது.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை தினந்தோறும் மாறி வரும் நிலையில், இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு முறை விலை மாற்றப்பட்டால் அதனால் ஏற்படும் லாப நட்டத்தை  பெட்ரோல் நிறுவனங்களே ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். தற்போது தினசரி விலை நிர்ணயிக்கப்படுவதால், லாபமோ, நட்டமோ அது பயன்பாட்டாளர்களை உடனடியாகச் சென்றடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் என்றால்?

நாட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில், 95 சதவீத விற்பனை நிலையங்கள், அதாவது சுமார் 58 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மத்திய அரசுக்குச் சொந்தமான ஐஓசி, பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவைகளுக்குச் சொந்தமானவை ஆகும்.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிப்பது சாத்தியமா?

நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயிப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமானதுதான்.

தினசரி விலை நிர்ணயத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தாதது ஏன்?

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறையை முதலில் பரிசோதனை ரீதியில் செயல்படுத்த வேண்டியுள்ளது. பரிசோதனை முறையில், இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டதும், அப்போது அதன் தாக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். குறைபாடுகள் இருப்பின் களையப்பட வாய்ப்பு ஏற்படும். பிறகு, இந்த நடைமுறை நாடு முழுமைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய விலை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்?

நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலையை நிர்ணயிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தால், சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது வாகன ஓட்டிகளுக்கு நன்மையளிக்குமா?

நிச்சயம். தற்போதைய நிலவரப்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையே பெட்ரோல்-டீசல் விலையில் சில காசுகள் ரீதியிலேயே வித்தியாசம் காணப்படுகிறது. நாள்தோறும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டால், இனி அதிக அளவுக்கு பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இருக்காது. சில காசுகள் மட்டுமே ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். வாகன ஓட்டிகள் மத்தியிலும் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com