குடியரசுத் தலைவர் வேட்பாளராக அத்வானியை முன்னிறுத்துவதில் சிக்கலா? பதிலளிக்க பாஜக மறுப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக எல்.கே. அத்வானியை முன்னிறுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதா?
குடியரசுத் தலைவர் வேட்பாளராக அத்வானியை முன்னிறுத்துவதில் சிக்கலா? பதிலளிக்க பாஜக மறுப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக எல்.கே. அத்வானியை முன்னிறுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய சட்டத் துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் மறுத்துவிட்டார்.
அதேவேளையில், இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை கட்சியினர் உறுதியாக நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் அத்வானி போட்டியிடலாம் என ஊகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த உத்தரவில் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதால், விசாரணைக் காலம் நிறைவடையும் வரை அத்வானியையோ, முரளி மனோகர் ஜோஷியையோ முக்கியப் பதவிகளுக்கு பாஜகவால் முன்னிறுத்த முடியாது என்ற கருத்து எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினர். இதுபோன்ற கற்பனைக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது என்று தெரிவித்த ரவிசங்கர் பிரசாத், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான கேள்விகளைத் தவிர்த்தார்.
அதேவேளையில், அத்வானி, ஜோஷி, உமா பாரதி போன்ற தலைவர்களுக்கு இந்த வழக்கில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை பாஜக உறுதியாக நம்புகிறது என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் அவர்களுக்கு கட்சி துணைநிற்கும் என்றார்.
இதனிடையே, பாபர் மசூதி இடிப்பு வழக்கு விவகாரத்தை கவனமாகக் கையாளுமாறும், பொதுமக்கள் இடையே பெரிய அளவில் அதுகுறித்து பேச வேண்டாம் என்றும் பாஜக முன்னணி தலைவர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com