இந்திய வங்கிகளிடம் ஏமாற்றிய கோடிகளை பிரிட்டனில் முதலீடு செய்த கில்லாடி விஜய் மல்லையா!

இந்திய வங்கிகளிடம் ஏமாற்றிய பல ஆயிரம் கோடியை ரூபாயை பிரிட்டனில் உள்ள நிறுவனங்களில் விஜய் மல்லையா முதலீடு செய்துள்ள திடுக்கிடும் தகவல்
இந்திய வங்கிகளிடம் ஏமாற்றிய கோடிகளை பிரிட்டனில் முதலீடு செய்த கில்லாடி விஜய் மல்லையா!

புதுதில்லி: இந்திய வங்கிகளிடம் ஏமாற்றிய பல ஆயிரம் கோடியை ரூபாயை பிரிட்டனில் உள்ள நிறுவனங்களில் விஜய் மல்லையா முதலீடு செய்துள்ள திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெற்ற கடனை சட்டவிரோதமாக பிரிட்டன் நிறுவனங்கள் மற்றும் பிரிட்டன் வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான முக்கிய ஆவணங்களை பிரிட்டன் அரசிடம் அளித்துள்ளதால், மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர முடியும் என்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மதுபான தொழிற்சாலைகள் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனங்களை நடத்தி வந்த இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, அரசுடைமை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவந்து விசாரணை நடத்த இங்கிலாந்து அரசு ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, லண்டன் நகரில் தங்கியிருந்த மல்லையாவை, ஏப்ரல் 17-ம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 மணி நேரத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகளை நாடு கடத்தும் வாரண்ட் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் மல்லையா கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் லண்டன் தப்பிச் செல்வதற்கு முன்பாகவே, பல ஆயிரம் கோடி ரூபாயை சட்டவிரோதமாக பிரிட்டன் நிறுவனங்கள் மற்றும் பிரிட்டன் வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளதாக, அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான முக்கிய ஆவணங்களை பிரிட்டன் அரசிடம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வலுவான ஆதாரங்கள் மூலம் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர முடியும் என்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மல்லையாவை திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு லண்டனில் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி முன் அடுத்த மாதம் 17-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது மல்லையாவுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை வெளியுறவு அமைச்சகம் மற்றும் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்ய உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com