விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

தில்லி தமிழக விவசாயிகள் 41 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக 15 நாட்களுக்கு வாபஸ் பெற விவசாயிகள் முடிவு
விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

புதுதில்லி: தில்லி தமிழக விவசாயிகள் 41 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக 15 நாட்களுக்கு வாபஸ் பெற விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக போராட்டக் குழு தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

தேசிய வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன் தள்ளுபடி, தமிழகத்தில் கூடுதல் வறட்சி நிவாரணம் தர வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் கடந்த 41 நாள்களாக பல்வேறு வடிவங்களில் தங்களை வருத்திக்கொண்டு போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார்.

அப்பொழுது போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு அவரிடம் கோரிக்கை மனு அளித்ததோடு, கோரிக்கைகளையும் விளக்கினார்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, நதிகள் இணைப்பிற்கு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தும், விவசாயிகள் வங்களில் பெற்றுள்ள கடன் ரத்து தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து அதற்கான நடவடிக்கை எடுக்க வழி செய்வேன் என்று உறுதியளித்தார்.

வறட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வழி செய்வோம். விவசாயிகள் போராட்டத்தை விட்டு தமிழகம் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இன்று தில்லியில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், தில்லியில் 41 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள், போராட்டத்தை தற்காலிகமாக 15 நாட்களுக்கு வாபஸ்
பெற முடிவு செய்துள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். அதை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்.

மே 25-ஆம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக விவசாயிகளை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்.

திமுக சார்பில் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 25 முதல் மீண்டும் போராட்டம் நடைபெறும். எங்கள் போராட்டத்துக்கு துணை நின்ற, ஆதரவளித்த தமிழக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார் அய்யாகண்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com