"நீட்' தேர்வை கட்டாயமாக்கக் கூடாது

தமிழகத்தில் ஏழை கிராமப்புற, நடுத்தர, பின்தங்கிய சமூக நிலைகளில் உள்ள மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய "நீட்' தேர்வு முறையை மத்திய அரசு கட்டாயமாக்கக் கூடாது
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் ஏழை கிராமப்புற, நடுத்தர, பின்தங்கிய சமூக நிலைகளில் உள்ள மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய "நீட்' தேர்வு முறையை மத்திய அரசு கட்டாயமாக்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: "நீட்' தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மாநிலத்தின் உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. மாநில அரசின் வெளிப்படையான மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை முறையின் மூலமாக பயனடைந்து வரும் தமிழக மாணவர்களுக்கு, மாபெரும் அநீதி இழைப்பதாகவும் இது அமைந்துள்ளது. மருத்துவக் கல்லூரிகள் உள்பட தொழில் பிரிவுகளில் சேர்க்கை நடைமுறையை முறைப்படுத்துவதற்காக 2005-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாநிலத்திலுள்ள இளநிலை (தொழிற்கல்வி) பிரிவுகளில் தமிழ்நாடு தொழிற்கல்வி நிறுவனங்களின் சேர்க்கை சட்டத்தின் வாயிலாக 2006-ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது அரசியலமைப்பு 254(2)-ஆம் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
தமிழக மாணவர் சேர்க்கை முறை, நலிவுற்ற பிரிவுகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களின் நலனைப் பாதுகாக்கிறது. பொது நுழைவுத் தேர்வை தடை செய்யும் தமிழக அரசின் முடிவால், பெருவாரியான எண்ணிக்கையில், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய, தகுதி வாய்ந்த கிராமப்புற மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். பட்ட மேற்படிப்பு சேர்க்கையைப் பொருத்த வரையிலும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றி வருபவர்களுக்கு, தமிழக அரசு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது. ஆனால், நீட் தேர்வை அறிமுகம் செய்வது இத்தகைய கொள்கை முயற்சிகள் செயல்படுத்தப்படுவதை பயனில்லாமல் செய்து விடும்.
அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்காக நடைமுறையிலுள்ள சேர்க்கை கொள்கையைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவை இரு சட்ட முன்வடிவுகளை அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றியது. இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 254(2)-ஆம் ஷரத்தின் கீழ், இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், தற்போது நடைமுறையில் உள்ள நியாயமான மற்றும் வெளிப்படையான சேர்க்கை முறை தொடர்வதற்கு ஏதுவாக இந்த இரு சட்ட முன்வடிவுகளுக்கும் உடனடியாக ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் சூழலைக் கருத்தில் கொள்ளாமல், பொறியியல் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் உள்ளிட்ட ஏனைய தொழிற்படிப்புகளுக்கும், பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன் என்றார் முதல்வர் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com