ஆம் ஆத்மி, காங்கிரஸை வாரி சுருட்டிய மோடி அலை!

தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு படுதோல்வியை பரிசளித்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறது பாஜக.
ஆம் ஆத்மி, காங்கிரஸை வாரி சுருட்டிய மோடி அலை!

தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு படுதோல்வியை பரிசளித்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறது பாஜக. "மோடி அலை'தான், பாஜகவின் இந்த அமோக வெற்றிக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் 2015 சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67-இல் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஆம் ஆத்மி கட்சி, அதன் பிறகு இறங்குமுகத்தில்தான் இருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற கோவா, பஞ்சாப் மாநில பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட அக்கட்சிக்கு தோல்வியே மிஞ்சியது. தில்லி ரஜௌரி கார்டன் இடைத் தேர்தலிலும் அவமானகரமான தோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி, 2-ஆம் இடம் கூட பிடிக்க முடியாமல், 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்தச் சூழலில், தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகள் புதன்கிழமை வெளியாகின. இதில், 3 மாநகராட்சிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஏற்கெனவே 10 ஆண்டுகளாக மாநகராட்சிகளில் ஆட்சியில் இருந்து வந்த பாஜகவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்துள்ளது.

இதுதொடர்பாக அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுகையில், "மாநகராட்சித் தேர்தல் வெற்றி மூலம் கடந்த பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மியிடம் கண்ட படுதோல்விக்கு பாஜக பழி தீர்த்துள்ளதாகவே கருதப்படுகிறது.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கையும், இருப்பையும் இத்தேர்தல் ஆட்டம் காண செய்திருக்கிறது. இதேபோல, தலைநகரில் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலை நாட்டுவது என்ற காங்கிரஸின் நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுள்ளது' என்றனர்.

ஆம் ஆத்மியில் கருத்து வேற்றுமை: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களுக்கு பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.

பஞ்சாப் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாகவும், தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள், பாஜக-சிரோமணி அகாலி தளம் கூட்டணிக்கு திருப்பிவிடப்பட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ஆம் ஆத்மி. மேலும், தில்லி மாநகராட்சித் தேர்தலில், வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்கு சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்தார். ஆனால், வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடிக்கு வாய்ப்பில்லை என்று கூறி, அவரது குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

தற்போதைய தேர்தல் தோல்விக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் நடைபெற்ற மோசடியே காரணம் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், அக்கட்சியின் சில தலைவர்களோ தேர்தல் தோல்விக்கு மின்னணு இயந்திரங்களை மட்டும் குறைகூறுவது சரியல்ல என்று வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில், ஆம் ஆத்மி தலைவர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com