சமூக விரோத அமைப்புகளால் வளர்ச்சித் திட்டங்களை தடுக்க முடியாது

தவறான கருத்துகளைப் பரப்பி சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்கும் சில உதிரி அமைப்புகளால் தேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு தடை போட முடியாது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்
சமூக விரோத அமைப்புகளால் வளர்ச்சித் திட்டங்களை தடுக்க முடியாது

தவறான கருத்துகளைப் பரப்பி சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்கும் சில உதிரி அமைப்புகளால் தேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு தடை போட முடியாது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
பசுப் பாதுகாப்பு அமைப்பினர் சிலர் வடமாநிலங்களில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவது குறித்தும், சில மாநிலங்களில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இத்தகைய கருத்தை வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
நகரமயமாக்கல் மற்றும் பொலிவுறு நகரங்கள் தொடர்பான பயிலரங்கம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். எனவே, ஊரகப் பகுதி மக்களின் நலன் சார்ந்தே எனது சிந்தனைகளும், செயல்களும் இருக்கும். இப்படியிருக்கும் சூழலில், அதற்கு நேர்மாறான நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அந்தத் துறையிலும் கூட, கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு புலம் பெயர்ந்து வரும் மக்களுக்கும் நல்லது செய்யலாம் என்று எனது அமைச்சரவை சகாக்கள் ஆலோசனை வழங்கினர்.
அதன்படி, நகர்ப்புற வளர்ச்சியுடன் சேர்த்து பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, கடந்த இரு ஆண்டுகளில் நகரங்களில் வசிக்கும் 18 லட்சம் ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதைத் தவிர நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூ.2.85 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சூழலில் பல பகுதிகள் அதிவேகமாக நகரமயமாகி வருகின்றன. அவற்றை நாம் விரும்புகிறோமோ, இல்லையோ அந்த மாற்றம் தீவிரமாக நிகழ்ந்து கொண்டேதான் வருகிறது.
சமூகத்தில் ஊறு விளைவிக்க வேண்டும் என நினைக்கும் சில அமைப்புகளாலும், சில ஊடகங்களாலும் அரசின் வளர்ச்சித் திட்டங்களை திசை திருப்ப முடியாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com