காஷ்மீர்: பிரிவினைவாதிகளுடன் பேச்சு இல்லை: மத்திய அரசு

''ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவது குறித்து பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது;
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் இளைஞர்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தும் இளைஞர்கள்.

''ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துவது குறித்து பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது; அதேநேரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுடன் பேசத் தயார்'' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பெல்லட் ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி, அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பெல்லட் ரக துப்பாக்கிகளுக்குப் பதிலாக வேறு துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்திருப்பதை சுட்டிகாட்டி, அந்த வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கௌல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அரசு தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடியதாவது:
காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. அதேநேரத்தில் பிரிவினைவாத அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தாது.
காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். இதுதொடர்பாக தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தியும் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றார் ரோத்தகி.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:
கல்வீச்சு சம்பவம், வன்முறை உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பான ஆலோசனைகளுடன் வரும்படி மனுதாரரை கேட்டுக் கொள்கிறோம். இந்த ஆலோசனைகளை அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசனை செய்தபிறகே தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து தரப்பினரின் பிரதிநிதியாக செயல்பட முடியாது என்று மனுதாரர் தெரிவிக்க கூடாது. அதேபோல், காஷ்மீர் விதிகளில் போராட்டம் மற்றும் கல்வீச்சு சம்பவம் நடைபெறாததையும் மனுதாரர் உறுதி செய்ய வேண்டும் என்றனர் நீதிபதிகள்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளுக்கு ரோத்தகி ஆட்சேபம் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் பிரிவினைவாதிகளை சேர்ப்பதன் மூலம், இந்த விவகாரத்துக்கு மனுதாரர் அரசியல் சாயம் பூசுவதாக குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'பேச்சுவார்த்தைக்கான ஏற்பாட்டை மட்டுமே எங்களால் செய்ய முடியும். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அரசு கருதினால், மனு மீதான விசாரணையை உடனடியாக நிறுத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண இருதரப்பும் இணைந்து செயலாற்ற வேண்டும். எனினும், மனுதாரரே இதற்கான முதல்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்படி அவர் செய்தால், வரலாற்றில் மனுதாரர் நினைவுகூரப்படுவார்' என்றனர்.
இதைத் தொடர்ந்து, வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com