பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக முடிவா?: அமித் ஷா பதில்

மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதும், பாஜக தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலை அமித் ஷா மறுத்துள்ளார்.
பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக முடிவா?: அமித் ஷா பதில்

மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதும், பாஜக தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலை அமித் ஷா மறுத்துள்ளார்.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக சார்பில் அமித் ஷா போட்டியிடுகிறார். குஜராத் பேரவையில் பாஜகவுக்கு போதிய எம்எல்ஏக்கள் இருப்பதால், அமித் ஷா வெற்றி பெறுவது உறுதியாகும். இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதும், பாஜக தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட அமித் ஷா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
பாஜக தேசியத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதென்ற கேள்விக்கே இடமில்லை. கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு பொறுப்புகள் உள்ளது. பாஜக தலைவர் பதவியில் மகிழ்ச்சியுடனும், உளமாரமாகவும் நான் பணியாற்றி வருகிறேன். எனவே, பத்திரிகையாளர்கள் அந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், 2014ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றியைக் காட்டிலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். நாட்டில் இதுவரை பிரதமராகப் பதவி வகித்தவர்களில், நரேந்திர மோடிதான் ஈடுஇணையில்லா புகழ்பெற்ற பிரதமராவார். நாட்டில், குடும்பம், ஜாதி, சாந்தப்படுத்துதலை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்கு முடிவு கட்டுவதில், மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய மத்திய அரசு, செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. அவரது அரசில் இடம்பெற்றிருந்த மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பிரதமராக கருதி செயல்பட்டனர். மன்மோகன் சிங்கை மத்திய அமைச்சர்கள் யாரும் பிரதமராகப் பார்க்கவேயில்லை.
இதற்கு முன்பு, மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகள், தங்களது சாதனைகளாக குறிப்பிட்ட சில பணிகளைத்தான் தெரிவித்தன. ஆனால், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற 3 ஆண்டுகாலத்தில், 50 முக்கியப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சிகாலங்களில், ரூ.12 லட்சம் கோடி மதிப்புக்கு ஊழல்கள் நடந்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 3 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக இதுவரை ஒரு ஊழல் புகார் கூட எழவில்லை.
பிகாரில் எந்த கட்சியையும் உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. ஊழல்வாதிகளுடன் சேர்ந்து தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாது என்று நினைத்ததால், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதென்ற முடிவை நிதீஷ் குமார்தான் எடுத்தார். அந்த முடிவை எடுக்கக் கூடாது என்று அவரை நாங்கள் என்ன கட்டுப்படுத்தவா முடியும்? என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com