சமையல் எரிவாயு மானியம் ரத்து: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யும் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.
சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.

சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யும் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு உருளைகளுக்கான மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது. இதனை அமல்படுத்தும் நோக்கில் சமையல் எரிவாயு உருளை விலையை மாதம்தோறும் 4 ரூபாய் உயர்த்த வேண்டுமென்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஏழை, நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.
மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை கூடியதும் அவையின் மையப்பகுதிக்கு வந்த காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சமையல் எரிவாயு மானிய ரத்து அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென்று கோரியும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன் அவையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். மீண்டும் கூடியபோதும், அமளி நீடித்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், அவை கூடியபோது விதி 267-ன் கீழ் அவையின் மற்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு எரிவாயு மானியம் ரத்து குறித்து விவாதிக்க வேண்டுமென்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் கோரிக்கை விடுத்தார். அப்போது அவர் பேசியதாவது:
சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்குவது என்பது அரசின் சமூகப் பொறுப்புகளில் ஒன்றாகும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பாதிக்கு மேல் குறைந்துவிட்ட நிலையில் சமையல் எரிவாயு விலையை உயர்த்துவதை ஏற்க முடியாது என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சமையல் எரிவாயு மானியத்தை ஏராளமானோர் விட்டுக் கொடுத்துள்ளனர். ஏழைகளுக்கும், மானியம் தேவைப்படுபவர்களுக்கும் அதனைத் தொடர்ந்து வழங்க வேண்டியது அவசியம். எரிவாயு விலை மாதம் ரூ.4 உயர்த்துவோம் என்று அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
மத்திய அரசு லாபநோக்கத்துடன் செயல்படுகிறதா? என்று சமாஜவாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும், ஏழைகளைக் கொன்றுவிட நினைப்பதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, சமையல் எரிவாயு விவகாரத்தை விவாதிக்க அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க முடியாது என்று துணைத் தலைவர் குரியன் அறிவித்தார்.
இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அவையின் மையப்பகுதிக்கு வந்து மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சர் பதில்: பின்னர் அவை கூடியபோது மத்திய அரசின் முடிவு குறித்து விளக்கமளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மானியத்தை முற்றிலுமாக நிறுத்தும் நோக்கில் சமையல் எரிவாயு விலையை மாதம்தோறும் சிறிது உயர்த்துவது என்று கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்தது.
இப்போதைய பாஜக அரசு கடந்த 3 ஆண்டுகளில் சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையை 14 கோடியில் இருந்து 21 கோடியாக அதிகரித்துள்ளது. 2.6 கோடி ஏழை பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
எனினும், அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் சரத் யாதவ், நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சமையல் எரிவாயு மானியம் ரத்து அறிவிப்பை நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிவித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் வெளிநடப்பு: மக்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு இந்த விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும்போது சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இதே கருத்தை வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு விளக்கமளிக்க வலியுறுத்தி அவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com