பள்ளி ஆசிரியர்கள் பி.எட். நிறைவு செய்ய கூடுதல் அவகாசம் மசோதா நிறைவேற்றம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள், குறைந்தபட்சத் தகுதியான பி.எட். படிப்பை நிறைவு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள், குறைந்தபட்சத் தகுதியான பி.எட். படிப்பை நிறைவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை 2019 வரை நீட்டிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
ஏற்கெனவே இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளதால், விரைவில் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த மசோதாவின்படி, பி.எட். மற்றும் இதர சில படிப்புகளை 2019-க்குள் நிறைவு செய்யாத ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்க வகை செய்யும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் கீழ் பல லட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். பி.எட். மற்றும் அதுதொடர்பான சில பயிற்சி படிப்புகளை நிறைவு செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. அந்தத் தகுதியை 2015-ஆம் ஆண்டுக்குள் அவர்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டது.
இந்தச் சூழலில், 11 லட்சம் ஆசிரியர்கள் இன்னமும் அந்த தகுதியை அடையவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அதற்கான அவகாசத்தை 2019-ஆம் ஆண்டு வரை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா கடந்த 22-ஆம் தேதி மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில், அந்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் நடைபெற்ற பிறகு சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com