குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை

பெங்களூருவில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஈகிள்டன் கோல்ஃப் ரிசார்ட் மற்றும் கர்நாடகா மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் வீட்டில்
குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை


பெங்களூரு: பெங்களூருவில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஈகிள்டன் கோல்ஃப் ரிசார்ட் மற்றும் கர்நாடகா மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் வீட்டில் வருவான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில், வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பாஜகவின் வலையில் சிக்காமல் இருப்பதற்காக, 44 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரில் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் பேரவையில், காங்கிரஸ் கட்சிக்கு 57 எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்களில் கடந்த 2 நாள்களில் 6 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகினர். அவர்களில், 3 பேர் பாஜகவில் இணைந்துவிட்டனர். இதனால், காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 51-ஆகக் குறைந்துவிட்டது. இந்த நிலையில், மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மாநிலத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல், வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் சார்பில், கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் போட்டியிடுகின்றனர்.

அகமது படேலுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள எம்எல்ஏ பல்வந்த் சிங் ரஜ்புத்தையும் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக நிறுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர், கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் அனைவரும், ராமநகரம் மாவட்டத்தின் பிடதியில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் சொகுசு அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் வரை, அவர்கள் அங்கேயே தங்கவைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. பாஜகவினரின் தொடர்பில் இருந்து விலக்கி வைக்கும் நோக்கத்தில், எம்எல்ஏக்களின் செல்லிடப்பேசிகள் ரிசார்ட்டில் பெற்றுக் கொள்ளப்பட்டன. காங்கிரஸில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் விலகிய எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலாவின் மகன் மகேந்திரசிங் வகேலா உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள், பெங்களூரு செல்லவில்லை.

இந்நிலையில், ""பாஜகவில் இணையும்படி காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு மிரட்டல் வருவதால், பாதுகாப்புக் கருதி, அவர்களை பெங்களூருக்கு அழைத்து வந்தோம்'' என்று எம்எல்ஏக்களுடன் தங்கியிருக்கும் கட்சியின் மாநிலச் செயலர் நிஷித் வியாஸ் கூறினர்.

பாஜக இழிவான அரசியலில் ஈடுபடுகிறது என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத் சோலங்கி குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறியதாவது:
பாஜக தனது அரசு அதிகாரம், பண பலம் ஆகியவற்றைக் காட்டி மிரட்டி, எங்கள் கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது. இந்தச் சூழலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை முதல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஈகிள்டன் கோல்ஃப் ரிசார்ட் மற்றும் கர்நாடகா மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சிவகுமாரின் சகோதரரும் எம்.பி.,யுமான சுரேஷ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com