கூகுளில் ரூ.1.44 கோடி ஊதியத்துடன் பணி என்பது உண்மையல்ல; பள்ளி மாணவன் செய்த குறும்பு!

சண்டிகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஹர்ஷித் ஷர்மா என்ற மாணவன், கூகுளில் ரூ.1.44 கோடி ஊதியத்துடன் கிராஃபிக் டிசைனராக பணியில் சேர்ந்திருப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.
கூகுளில் ரூ.1.44 கோடி ஊதியத்துடன் பணி என்பது உண்மையல்ல; பள்ளி மாணவன் செய்த குறும்பு!


சண்டிகர் : சண்டிகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஹர்ஷித் ஷர்மா என்ற மாணவன், கூகுளில் ரூ.1.44 கோடி ஊதியத்துடன் கிராஃபிக் டிசைனராக பணியில் சேர்ந்திருப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது.

இது விளையாட்டுக்காக மாணவன் செய்த குறும்புதான் என்றும், அது தெரியாமல் பள்ளி ஆசிரியர், பள்ளி நிர்வாகத்துக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளித்ததால் இந்த செய்தி நேற்று ஊடகங்களில் பரவியது தெரிய வந்துள்ளது.

அந்த மாணவன் கூறியதை ஆசிரியர்கள் நம்புவதற்கு ஒரு காரணமும் இருந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, செல்போன் அப்ளிகேஷன்களை எவ்வாறு பயன்படுத்துவது, பணமின்றி டெபிட், கிரெடிட் கார்டுகளைக் கொண்டு எவ்வாறு கட்டணம் செலுத்துவது போன்ற பல விஷயங்களை பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களும் ஹர்ஷித் ஷர்மா கூறியுள்ளான். இதுவே அவன் சொன்ன பொய்யை நம்பக் காரணமாக அமைந்துவிட்டது.

இது குறித்து பள்ளி ஆசிரியர் கூறுகையில், 15 நாட்களுக்கு முன்பு, ஒரு பெட்டி நிறைய இனிப்புகளைக் கொண்டு வந்த ஹர்ஷித், தனக்கு கூகுளில் வேலை கிடைத்திருப்பதாகவும், விரைவில் தான் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கூறினான். இந்தப் பணிக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பித்ததாகவும் அவன் கூறினான்.

அவன் கணினியில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததால் அவன் சொன்னதை நாங்களும் நம்பினோம் என்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், பள்ளி ஆசிரியர் இது பற்றி கூறியதும், உரிய ஆதாரங்களை மாணவனிடம் கேட்டோம். அவனும் கூகுள் அளித்தது போன்ற ஒரு சான்றிதழை அளித்தான். அது பற்றி விரிவான அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகத்துக்கு அளித்தோம். ஆனால், அந்த சான்றிதழ் பொய்யானது என்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி கேட்க மாணவனை தொடர்பு கொண்ட போது அவனது செல்ஃபோன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, சண்டிகர் அரசுப் பள்ளியில் பயிலும் ஹர்ஷித்துக்கு கூகுளில் கிராஃபிக் டிசைனர் பணி கிடைத்திருப்பதாகவும், முதல் ஒரு வருடத்துக்கு அந்நிறுவனம் இந்த மாணவருக்கு பயிற்சி அளிக்கிறது. இந்தப் பயிற்சிக் காலத்தில் மட்டும் மாதம் ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும். இதையடுத்து, பணியில் சேர்ந்த பின்பு மாதம் ரூ.12 லட்சம் வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.1.44 கோடி ஊதியம் அளிக்கும். இதற்கான பணி ஆணையை கூகுள் நிறுவனம் ஹர்ஷித்துக்கு செவ்வாய்கிழமை வழங்கியது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com