கடவுளால் கைவிடப்பட்ட தேசமாகிவிட்டது கேரளம்: பாஜக எம்.பி.

கேரளத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொல்லப்படுவதை தடுக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தவறிவிட்டது; கடவுளின் சொந்த தேசமாக இருந்த அந்த மாநிலம்,

கேரளத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொல்லப்படுவதை தடுக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தவறிவிட்டது; கடவுளின் சொந்த தேசமாக இருந்த அந்த மாநிலம், இப்போது கடவுளால் கைவிடப்பட்ட தேசமாக மாறிவிட்டது' என்று மக்களவையில் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி குற்றம்சாட்டினார்.
மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பின் இந்த விவகாரத்தை எழுப்பி, அவர் பேசியதாவது:
கேரளத்தில் அரசியல் மாற்றுக் கருத்து கொண்டவர்கள் 'தலிபான் பயங்கரவாத இயக்கத்தின்' பாணியில் கொல்லப்படுகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் குறிவைக்கப்படுகின்றனர். கடவுளின் சொந்த தேசமாக இருந்த கேரளம், இப்போது கடவுளால் கைவிடப்பட்ட தேசமாக மாறிவிட்டது என்றார் மீனாட்சி லேகி.
பின்னர், கேரளத்தில் கொலையான பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பெயர்களை வாசித்துவிட்டு, அவர் கூறியதாவது:
பெலூகான், அக்லாக் (இருவரும் மாட்டிறைச்சி விவகாரத்தில் கொல்லப்பட்டவர்கள்) ஆகியோரின் பெயர்களை, உறுப்பினர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆனால், கேரளத்தில் கொலையான நபர்கள் குறித்து யாருக்கும் தெரியாதது ஆச்சரியம் அளிக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரின் குழந்தைகளை குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. கேரளத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஆர்எஸ்எஸ் தொண்டர் ராஜேஷின் உடலில் 80 இடங்களில் காயங்கள் இருந்தன. அவரது கைகளும் துண்டிக்கப்பட்டன. கண்ணூரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றார் மீனாட்சி லேகி.
மற்றொரு பாஜக எம்.பி. பிரஹலாத் ஜோஷி பேசுகையில், 'கேரளத்தில் கடந்த 17 மாதங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; இக்கொலைகளில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கிறோம். இதுகுறித்து சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
பாஜக எம்பிக்களின் இந்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கோஷமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com