கர்நாடக அமைச்சர் வீடுகளில் சோதனை: ரூ.10 கோடி பறிமுதல்

கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், தொழிலகங்கள் உள்பட 64 இடங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை நடத்திய சோதனையில்
குஜராத் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பெங்களூரு புறநகர்ப் பகுதியில் உள்ள ஈகிள்டன் விடுதி.
குஜராத் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பெங்களூரு புறநகர்ப் பகுதியில் உள்ள ஈகிள்டன் விடுதி.

கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், தொழிலகங்கள் உள்பட 64 இடங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை நடத்திய சோதனையில் ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அமைச்சர் டி.கே.சிவக்குமார், மனைத் தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரது சகோதரர் டி.கே.சுரேஷ், காங்கிரஸ் எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். இதனிடையே, குஜராத் மாநிலத்தில் நடக்கவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் பின்னணியில் அம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்கள் ஜூலை 30-ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலம், ராமநகரத்தில் உள்ள ஈகிள்டன் கேளிக்கை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மேலிடம் வழங்கியிருந்தது.
அரசு முறை பயணமாக தில்லி சென்றிருந்த மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெங்களூரு திரும்பியதும், ராமநகரம் சென்று ஈகிள்டன் கேளிக்கை விடுதியில் ஓய்வெடுத்திருந்தார். இந்த நிலையில், பெங்களூரு, கனகபுரா, மைசூரு, தில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதன்கிழமை காலை 6.30 மணி முதல் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், தொழிலகங்கள், அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்களின் வீடுகள் உள்பட 64 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் வரி ஏய்ப்பு செய்துள்ளதற்கான ஆவணங்கள், தங்க ஆபரணங்கள், தில்லி இல்லத்தில் இருந்து ரூ.7.9 கோடி ரொக்கம், தென் மாவட்டங்களில் உள்ள வீடுகளில் ரூ.2.23 கோடி ரொக்கம் மற்றும் அமைச்சரின் வீடு, அலுவலகங்களிலிருந்து 5 பெட்டிகளில் ஆவணங்களைத் திரட்டியதாகவும் வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது: இதுகுறித்து வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரிச் சட்டப் பிரிவு 132-இன்படி ஆதாரங்களைச் சேகரிக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில காலமாக நடந்துவரும் விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனை நடத்துவது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. பிற மாநிலத்தின் எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ள நிகழ்வு எதிர்பாராததாகும். பெங்களூருக்கு அருகே பிற மாநில எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கேளிக்கை விடுதியில் சோதனை நடத்தப்பட்டது என்றாலும், அங்கு அமைச்சர் டி.கே.சிவக்குமார் தங்கியிருந்த அறை மட்டுமே சோதனைக்குள்படுத்தப்பட்டது.
பிற மாநில எம்.எல்.ஏ.க்கள் குறித்து வருமான வரி அதிகாரிகளுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அந்த எம்எல்ஏக்களுக்கும் வருமான வரித் துறை சோதனை அதிகாரிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. வருமான வரித் துறையின் சோதனை கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் சம்பந்தப்பட்டது மட்டுமே என்பதை உறுதிபட தெளிவுப்படுத்த விரும்புகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்: வரி ஏய்ப்பு செய்துள்ளது, மனைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது குறித்து வெளிப்படையாக தெரிவிக்காதது குறித்துதான் விசாரணை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் சிவக்குமார் சம்பந்தப்பட்டவர்கள் செய்திருக்கும் முதலீடுகள் குறித்தும் விசாரித்து வருவதாக அந்த அதிகாரிகள் மேலும் கூறினர். ஈகிள்டன் கேளிக்கை விடுதியில் விசாரணை நடத்தியபோது, தன் கையில் வைத்திருந்த சில காகித ஆவணங்களை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கிழித்தெறிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காகிதங்களை மறுபடியும் ஒன்று சேர்த்து அதன் விவரங்களை அறிய வருமான வரி அதிகாரிகள் முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கேளிக்கை விடுதியில் டி.கே.சிவக்குமாரிடம் சிலமணி நேரம் விசாரணை நடத்திய வருமான வரி அதிகாரிகள், அங்கிருந்து அவரை அழைத்துச் சென்று அவரது சதாசிவ நகர் இல்லத்தில் வைத்து முதலீடுகள், வரி ஏய்ப்பு குறித்து துருவித்துருவி விசாரித்தனர்.
போராட்டம்: டி.கே.சிவக்குமாருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வருமான வரித் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
டி.கே.சிவக்குமார் கைது?


வரி ஏய்ப்பு தொடர்பாக அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குத் தொடர்ந்துள்ள வருமான வரித் துறை அதிகாரிகள், அவரைக் கைது செய்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, டி.கே.சிவக்குமாரின் வலதுகரமாகச் செயல்பட்டு வந்த வினய் கார்த்திக்கை தனி இடத்திற்கு அழைத்து சென்று வருமானவரி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
வினய் கார்த்திக்கையும் வருமான வரி அதிகாரிகள் கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல, சிவக்குமாரின் நீண்டகால நண்பரும், ஜோதிடருமான துவாரகநாத் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், அவரையும் கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் ரீதியாக காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே கர்நாடகத்தில் பலம் வாய்ந்த அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரக் குழு தலைவரும், கட்சி மேலிடத்திற்கு மிகுந்த நம்பிக்கைக்குரியவருமான டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
அரசியல் உள்நோக்கம்


அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்கள் மீது வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனை அரசியல் உள்நோக்கம்கொண்டது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பது தெளிவாக விளங்குகிறது.
தனது அரசியல் சதி திட்டங்களுக்கு வருமான வரித் துறையைப் பயன்படுத்துவது மத்திய அரசுக்கு அழகல்ல.
இதுபோன்ற மிரட்டல் தந்திரங்களுக்கு மாநில அரசு தலைவணங்காது. சோதனை சமயத்தில் விதிகளின்படி உள்ளூர் காவல்துறையின் உதவியைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு மாறாக, மத்திய அதிரடி காவல் படையினரைப் பயன்படுத்தியிருப்பது விதிமீறலாகும். வருமான வரி அதிகாரிகள் சட்ட விதிகளுக்குள்பட்டு சோதனை நடத்தி விசாரணை நடத்தட்டும். அதன் மூலம் மக்களுக்கு உண்மையை தெளிவாக்கட்டும். ஆனால் அரசியல் பழிவாங்கலுக்காக இதுபோன்று அதிரடி சோதனைகளில் ஈடுபடுவதை கவனித்துவரும் மக்கள், எதிர்காலத்தில் பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். தங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் மீது வருமான வரித் துறை சோதனை என்ற பிரம்ம அஸ்திரத்தை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. இது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று முதல்வர் சித்தராமையா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சோதனைக்கும், குஜராத் தேர்தலுக்கும் தொடர்பில்லை
கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனைக்கும், குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்தார்.
கர்நாடக மாநில அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்தியதையும், குஜராத் மாநிலங்களவைத் தேர்தலையும் தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை. கர்நாடகத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள விடுதியில் சோதனை நடத்தப்படவில்லை. எனினும், அமைச்சர் வேண்டுமென்றே அந்த விடுதிக்குச் சென்றார். பின்னர் விசாரணைக்காகவே அவர் அங்கிருந்து அழைத்துவரப்பட்டார். மேலும், அங்கு வைத்து சில முக்கிய தகவல்கள் எழுதப்பட்ட காகிதங்களை அமைச்சர் கிழித்துள்ளார். அந்த காகிதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.

வருமான வரித்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்திய பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் இல்லம்.
வருமான வரித்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்திய பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் இல்லம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com