நிபந்தனையின்றி படைகளை திரும்பப் பெற சீனா வலியுறுத்தல்

சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா நிறுத்தியுள்ள படைகளை எவ்வித நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டுமென்று சீனா வலியுறுத்தியுள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா நிறுத்தியுள்ள படைகளை எவ்வித நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டுமென்று சீனா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 15 பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்மையில் சீனா வந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன், சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜெய்சி பேச்சு நடத்தினார். இந்தியத் தரப்பு வேண்டுகோளின்படிதான் இந்தப் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, சிக்கிம் பகுதியில் இந்திய வீரர்கள் சீன எல்லைக்குள் ஊடுருவியது குறித்து யாங் ஜெய்சி தெளிவாக எடுத்துரைத்தார்.
சர்வதேச சட்டங்களையும், சீனாவின் இறையாண்மையையும் இந்தியா மதித்து நடக்க வேண்டும். மேலும், சிக்கிம் எல்லையில் இந்தியா நிறுத்தி வைத்துள்ள படைகளை எவ்வித நிபந்தனையும் இன்றி திரும்பப் பெற வேண்டும். இந்திய வீரர்கள் சீனஎல்லைக்குள் ஊடுருவதை நிறுத்த வேண்டும். இந்தியாவின் அத்துமீறல்களை சீனா எளிதாக எடுத்துக் கொள்ளாது.
கடந்த ஜூன் 18-ஆம் தேதி 270 இந்திய வீரர்கள் சீன எல்லைக்குள் 100 மீட்டர் வரை ஊடுருவி சீன தரப்பு மேற்கொண்ட சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்தில் சீன எல்லைக்குள் 3 கூடாரங்களை அமைத்து 400 வீரர்கள் வரை தங்கியிருந்தனர். இதுதான் பதற்றம் அதிகரிக்க முக்கியக் காரணம். ஜூலை மாத இறுதியில் 40 இந்திய வீரர்களும், ஒரு சாலை அமைக்கும் இயந்திரமும் சீன எல்லைக்குள் உள்ளது என்பது இந்தியத் தரப்பிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தியாவுடன் அமைதியான நல்லுறவைத்தான் சீனா விரும்புகிறது. அதற்கு எல்லையில் அமைதி நிலவ வேண்டியது அவசியம்.
இந்தியா தலையிடத் தேவையில்லை: சீன-பூடான் எல்லை எங்கள் இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னை. இதில் இந்தியா தலையிடத் தேவையில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரு தரப்பும் எல்லையில் படைகளை வாபஸ் பெற வேண்டுமென்று இந்திய தரப்பு கூறி வரும் நிலையில், சீனா அதற்கு முற்றிலும் மாறாக இந்தியத் தரப்பு நிபந்தனையின்றி படைகளை வாபஸ் பெற வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.
வீரர்களை இந்தியா குறைத்துக் கொள்ளவில்லை
இது தொடர்பாக இந்திய ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சீனா தனது அறிக்கையில் கூறியுள்ளதுபோல எல்லையில் நிலைநிறுத்தியுள்ள வீரர்களை இந்தியா குறைத்துக் கொள்ளவில்லை. இப்போது வரை 350 முதல் 400 வீரர்கள் டோகாலாம் எல்லையில் உள்ளார்கள். அவர்கள் சீன ராணுவத்தின் ஊடுருவலுக்கு எதிராக இந்திய எல்லையைக் காத்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சீனாவின் அறிக்கை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com