புதிய கட்சியைத் தொடங்குகிறார் சரத் யாதவ்?

பிகாரில் மகா கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி விலகியதால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும்
புதிய கட்சியைத் தொடங்குகிறார் சரத் யாதவ்?

பிகாரில் மகா கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சி விலகியதால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் அக்கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாக அவருடைய நெருங்கி நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், இந்தத் தகவல் வெறும் வதந்தி என்று ஜேடியுவின் முதன்மை பொதுச் செயலர் கே.சி.தியாகியும், சரத் யாதவின் மற்றொரு நெருங்கிய நண்பரும் தெரிவித்தனர்.
பிகாரில் பாஜகவுக்கு எதிராக கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மகா கூட்டணி அமைத்து வென்றது. இந்நிலையில், லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தன.
இதன்காரணமாக, ஆர்ஜேடி, ஜேடியு இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையால்கூட எதுவும் செய்ய முடியாமல் போனது.
இந்தச் சூழலில், திடீரென அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக ஜேடியு தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, மாநிலத்தில் நிதீஷ் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு பாஜக ஆதரவளிக்க முன்வந்தது. அக்கட்சி ஆதரவுடன் மீண்டும் நிதீஷ் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.
பாஜகவுடன் இணையலாம் என நிதீஷ் எடுத்த முடிவை ஜேடியுவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த திங்கள்கிழமை அவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக மக்கள் மகா கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை. பாஜகவுடன் ஜேடியு இணைந்தது துரதிருஷ்டவசமானது' என்றார்.
இதன்மூலம், நிதீஷ் மீது சரத் யாதவ் அதிருப்தியில் இருப்பது உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. அதேநேரம், சரத் யாதவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், சரத் யாதவ் தலைமையில் புதிய கட்சி தொடங்க வாய்ப்பிருப்பதாக அவரது நண்பர் விஜய் வர்மா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'கட்சியின் பழைய நண்பர்களுடன் சரத் யாதவ் தொடர்பில் இருக்கிறார். தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அவர் கலந்தாலோசனை நடத்தி வருகிறார்' என்றார்.
கே.சி. தியாகி கூறுகையில், 'சரத் யாதவை எனக்கு 40 ஆண்டுகளாக தெரியும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிறகு லாலுவிடம் இருந்து அவர் பிரிந்துவிட்டார். அவருடன் மீண்டும் எப்படி கைகோர்ப்பார்?' என்று கேள்வி எழுப்பினார். சரத் யாதவ் புதிய கட்சியைத் தொடங்க வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருவது பிகார் மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com