வெள்ள நிவாரணத் தொகை: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

வடகிழக்கு மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணமாக மிக சொற்ப அளவிலான தொகையையே மத்திய அரசு வழங்கியுள்ளதாக அஸ்ஸாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய்

வடகிழக்கு மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணமாக மிக சொற்ப அளவிலான தொகையையே மத்திய அரசு வழங்கியுள்ளதாக அஸ்ஸாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது: பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அஸ்ஸாம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அந்த மாநிலங்களில் லட்சக்கணக்கானோர் இன்னமும் வெள்ளத்துக்கு நடுவே சிக்கியுள்ளனர். பலர் உணவு கூட கிடைக்காமல் பட்டினி கிடந்து வருகிறார்கள்.
வெள்ளத்தின் இத்தகைய கோரப்பிடியில் சிக்கியிருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துக்கும் நிவாரணத் தொகையாக வெறும் ரூ.2,350 கோடியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதிலும், அஸ்ஸாமுக்கு முதல்கட்டமாக ரூ.250 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இது மிகவும் சொற்ப அளவிலான தொகையாகும்.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பாதிப்பை நினைத்து கவலைப்படுவதாக மோடி கூறுகிறார். அதேசமயத்தில், அந்த மாநிலங்களுக்கு சொற்ப அளவிலான நிவாரணத் தொகையை மட்டுமே அவர் அறிவித்திருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களைப் பற்றிய அவரது கவலைகள், உதட்டளவில் மட்டுமே இருக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடியை வழங்கிய மோடி அரசால், கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அதில் 10 சதவீதத்தை மட்டுமே அறிவிப்பதற்கு எப்படி மனம் இடம் கொடுக்கிறது?
எனக்குத் தெரிந்தவரையில், அஸ்ஸாமில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பாதிப்புகள் குறித்து மோடியிடிம் மாநில அரசு முறையாக தெரிவிக்கவில்லை. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்புகளை ஓரளவுக்கு சீர்செய்வதற்கே ரூ.50 ஆயிரம் கோடி தேவைப்படும். எனவே, இந்தத் தொகையை மத்திய அரசிடமிருந்து அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் கேட்டுப் பெற வேண்டும் என்றார் தருண் கோகோய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com