கனவு நனவானது: நீதி ஆயோக் பதவி குறித்து அரவிந்த் பனகரியா பெருமிதம்

நீதி ஆயோக் அமைப்பின் முதல் துணைத் தலைவராக பொறுப்பு வகித்ததன் மூலம் தனது கனவு நனவாகியுள்ளதாக, அந்தப்
கனவு நனவானது: நீதி ஆயோக் பதவி குறித்து அரவிந்த் பனகரியா பெருமிதம்

நீதி ஆயோக் அமைப்பின் முதல் துணைத் தலைவராக பொறுப்பு வகித்ததன் மூலம் தனது கனவு நனவாகியுள்ளதாக, அந்தப் பதவியை ராஜிநாமா செய்துள்ள அரவிந்த் பனகரியா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
உங்களது தலைமையின் கீழ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக முக்கியப் பொறுப்பை வகித்ததை எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன்.
நீதி அயோக் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்ததன் மூலம் எனது நீண்ட காலக் கனவு நனவானதாகச் சொன்னால் கூட அது எனது உணர்வை முழுமையாக வெளிப்படுத்தாது.
நீங்கள் எனக்களித்த வாய்ப்பும், அனுபவமும் கனவிலும் கூட நான் நினைத்துப் பார்த்திராதது ஆகும்.
என்னைப் போன்ற ஒரு 'வெளியாளுக்கு' இவ்வளவு பெரிய பொறுப்பை அளிக்கும் தைரியம் இதற்கு முன் எந்தப் பிரதமருக்கும் இருந்ததில்லை.
நான் உங்களிடம் நேரில் சொன்னதுபோல், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எனது விடுப்புக் காலம் விரைவில் முடிவடைகிறது. மேலும், நான் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எனது மனைவியும் விரும்புகிறார்.
இந்தக் காரணங்களுக்காகவே நான் எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் நீதி ஆயோக் அமைப்பின் பொறுப்புகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன.
எனவே, நீதி ஆயோக் துணைத் தலைவரின் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில், ஜி20 மாநாடுகளின்போது இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவை ஒருங்கிணைப்பதற்கு தனி ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தனது கடிதத்தில் பனகரியா குறிப்பிட்டுள்ளார்.
ஜி20 மாநாடுகளின்போது, நீதி ஆயோக்கின் துணைத் தலைவர்தான் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவை ஒருங்கிணைக்கும் பொறுப்பை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் கொள்கைகளை வகுப்பதற்காக திட்டக் குழுவுக்குப் பதிலாக பாஜக அரசு ஏற்படுத்திய அமைப்பு நீதி ஆயோக். இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் உள்ள நிலையில், அதற்கு அடுத்த நிலையிலுள்ள துணைத் தலைவர் பதவியில் முதல் முறையாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பொருளாதார வல்லுநர் அரவிந்த் பனகரியா நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக அவர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்த மாதம் 31-ஆம் தேதி வரை நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக அவர் பொறுப்பு வகிப்பார்.
பனகரியாவின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, இந்தியாவில், மிக முக்கிய உயர் பொறுப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்க இந்தியப் பொருளாதார நிபுணர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே, அமெரிக்காவின் சிகாகோ பொருளியல் கல்லூரியில் பணியாற்றி, பிறகு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த ரகுராம் ராஜன், அந்தப் பதவியைத் தொடராமல் விலகினார்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் அந்த முடிவை எடுத்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com