சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு போர் தீர்வல்ல

சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு போர் தீர்வாகாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை விவாதத்துக்கு பதிலளித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை விவாதத்துக்கு பதிலளித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு போர் தீர்வாகாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இந்திய வெளியுறவுக் கொள்கை மற்றும் நட்பு நாடுகளுடனான நல்லுறவு குறித்த விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்துப் பேசியதாவது:
பொறுமைதான் பல பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும். ஒரு தரப்பு பொறுமை இழந்துவிட்டால், அது மற்றொரு தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும். எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து சீனாவுடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இருதரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் விரைவில் தீர்வு எட்டப்படும்.
போர் தீர்வாகாது: நமது ராணுவம் எப்போதும் தயாராகவே உள்ளது. இவ்வாறு கூறுவதால், நாம் போருக்கு தயாராக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல. போர் ஒருபோதும் பிரச்னைக்குத் தீர்வாகாது.
ராஜீய ரீதியில் பேச்சு நடத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் அறிவார்ந்த செயலாக இருக்கும். இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். டோகலாம் எல்லைப் பிரச்னை மட்டுமல்லாது அணுவிநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக சீனா எதிர்ப்புத் தெரிவித்து வருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சீனாவுடன் பேச்சு நடத்தப்படுகிறது . எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றுதான் இந்தியா விரும்புகிறது.
பாகிஸ்தானுடன் பேச்சு? பாகிஸ்தான் விவகாரம் குறித்துப் பேசிய சுஷ்மா, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வாய்ப்பு உள்ளது என்றார்.
ராகுல் மீது தாக்கு: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சீனத் தூதரை சந்தித்ததை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்த சுஷ்மா, 'சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து மத்திய அரசிடம் தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முன்வராத காங்கிரஸ் துணைத் தலைவர் , சீன தூதரை அவசரமாக சந்தித்துப் பேசினார். அவர் சரியாக நடந்து கொள்பவர் என்றால் முதலில் மத்திய அரசிடம் தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பின்னர், சீனத் தூதரிடம் பேசியிருக்க வேண்டும் என்றார் சுஷ்மா.
காங்கிரஸ் கேள்வி

விவாதத்தில் பங்கேற்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா.
விவாதத்தில் பங்கேற்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா.


இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார். அவர் பேசியதாவது:
நட்பு நாடுகளுடன் உறவை மேம்படுத்தும்போது அனைத்து நட்பு நாடுகளுக்கும் சமஅளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதைய மத்திய அரசிடம் சீனா கடுமை காட்டி வருகிறது. சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ராஜீய ரீதியிலான அனைத்து வழிகளும் மூடப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.
தேச நலன் சார்ந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு துணை நிற்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. அதே நேரத்தில் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.
மோடி மீது குற்றச்சாட்டு: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சமீபகாலத்தில் இருமுறை சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், அவருடன் என்ன பேசினார் என்பது குறித்து ஒரு வார்த்தையைக் கூட மோடி இதுவரை தெரிவிக்கவில்லை. சீனாவுடன் சமீபகாலத்தில் இல்லாத அளவுக்கு எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டு அதிபருடன் பேசியது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது பிரதமரின் கடமையாகும். தேசநலன் சார்ந்த முக்கிய விஷயத்தில் அவர் மெளனம் காப்பதை ஏற்க முடியாது.
இந்தியா தனிமைப்படக் கூடாது: தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், அண்மையில் சீனா சென்று வந்தார். ஆனாலும், எல்லைப் பிரச்னையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அண்டை நாடுகளுடனான நல்லுறவை மோசமாக்கிக் கொள்ளக் கூடாது. பாகிஸ்தானை தனிப்படுத்தும் முயற்சியில் இந்தியா தனிமைப்பட்டுவிடவும் கூடாது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்படத் தயாராக இருப்பதாக சீனா கூறியிருப்பது கவலையளிக்கும் விஷயமாகும். பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் முக்கிய நாடாக சீனா மாறி வருவது இந்திய நலன்களுக்கு உகந்ததல்ல.
அண்டை நாடுகளைச் சரியாகக் கையாள முடியாமல், இந்தியா எப்படி சர்வதேச அளவில் முக்கியப் பங்காற்ற முடியும்?
மத்திய அரசின் திட்டம் என்ன? வெளியுறவு விஷயத்தில், முக்கியமாக சீனாவுடனான பிரச்னையைத் தீர்ப்பதில் உங்கள் திட்டம் என்ன? மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் நிச்சயத்தன்மை இல்லை. அது மாறிக் கொண்டே இருக்கிறது என்றார் ஆனந்த் சர்மா.
பிரச்னைக்கு காரணம்
சீன எல்லையில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் டோகலாம் பகுதிக்குள் இரு மாதங்களுக்கு முன்பு அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், அங்கு சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். அந்தப் பணிகளை இந்திய ராணுவம் தடுத்து விட்டது. கூடுதலாக இந்திய வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சீனாவும் தனது ராணுவத்தை எல்லையில் நிறுத்தியுள்ளது. இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது.
இரு தரப்பும் படைகளை திரும்பப் பெறலாம் என்று இந்தியா கூறி வரும் நிலையில், இந்தியா எவ்வித நிபந்தனையுமின்றி படைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்று சீனா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com