தமிழகத்தில் 2 இரட்டை ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: சுரேஷ் பிரபு தகவல்

தமிழகத்தில் மின்மயத்துடன்கூடிய இரண்டு இரட்டை அகல ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
தமிழகத்தில் 2 இரட்டை ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: சுரேஷ் பிரபு தகவல்

தமிழகத்தில் மின்மயத்துடன்கூடிய இரண்டு இரட்டை அகல ரயில் பாதைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மின்மய வசதியுடன் வாஞ்சி மணியாச்சி முதல் நாகர்கோவில் வரை (திருநெல்வேலி வழியாக) இரட்டை அகல ரயில் பாதை, மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இடையே மின் வசதியுடன்கூடிய இரட்டை அகல ரயில் பாதை ஆகியவற்றின் கட்டுமானப் பணியை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல, கேரளத்தில் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே இரட்டை அகல ரயில் பாதைப் பணிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 120 கி. மீ. தூரத்திற்கு வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் வழித்தடத்தில் ரூ.1,114.62 கோடி மதிப்பீட்டில் இரட்டை அகல ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த நான்கு ஆண்டுகளில் அதாவது 2020-21-க்குள் முடிக்கப்படும். இத்திட்டமானது 24.24 லட்சம் மனித உழைப்பு நாள்களுக்கான நேரடி வேலைவாய்ப்பை அளிக்கும்.
அதேபோன்று, 160 கி. மீ. தூரத்திற்கு மதுரை - வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி வழித்தடத்தில் ரூ.1,272.51 கோடி மதிப்பீட்டில் இரட்டை அகல ரயில் பாதை கட்டுமானப் பணிகள் அடுத்த நான்கு ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்த திட்டமானது 38.40 லட்சம் மனித உழைப்பு நாள்களுக்கான நேரடி வேலைவாய்ப்பை அளிக்கும். இதன் மூலம் அந்த ரயில் வழித்தடங்களில் பயணிகள் போக்குவரத்தும், சரக்குப் போக்குவரத்தும் அதிகரிக்கும்.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு கடந்த ஆட்சியைவிட அதிகமான நிதியை ஒதுக்கி வருகிறது. அதாவது 2009-10 முதல் 2013-14 நிதியாண்டு வரையிலான காலத்தில் ஓர் ஆண்டுக்கு சராசரியாக ரூ.878.60 கோடி நிதி மட்டுமே தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிதி 77 சதவீதம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2014-15 முதல் 2016-17 நிதியாண்டு வரையிலான காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1,553 கோடி தமிழகத்துக்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-18-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்துக்கு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.2,287 கோடி ஒதுக்கப்பட்டது. இது 2009-14-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு சராசரியை விட 160 சதவீதம் அதிகமாகும்.
தமிழகத்தில் மனித வளம்: தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் திறன்மிக்க மனித வளமும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. அதை மேம்படுத்த மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான கூட்டணி அரசு விரும்புகிறது. இதனால்தான் தமிழகம் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த பாஜக மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் குறிப்பாக ரயில்வே திட்டங்களை தமிழகத்துடன் இணைந்து செயல்படுத்த மத்திய அரசு மிகுந்த முனைப்புக் காட்டி வருகிறது. இதற்கான கூட்டு ஒத்துழைப்புகளில் ஈடுபட தமிழக அரசு விரும்பினாலும், இன்னும் கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சகம் ஆர்வம் காட்டி வருகிறது என்றார் சுரேஷ் பிரபு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com