போலி விசா மூலம் அரபு நாடுகளுக்கு செல்லக் கூடாது: இந்தியர்களுக்கு தூதரகம் வலியுறுத்தல்

ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் செல்வதற்கு சுற்றுலா விசாவை இந்தியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் செல்வதற்கு சுற்றுலா விசாவை இந்தியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
போலி விசா தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இத்தகைய உத்தரவை இந்தியத் தூதரகம் பிறப்பித்துள்ளது. துபை, ஓமன் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வேலைத் தேடிச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இதற்காக போலி முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காகச் செல்பவர்களில் பலர், சுற்றுலா விசா மூலம் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு பயணிப்பதாகத் தெரிகிறது. அங்கு சென்ற பிறகே பெரும்பாலானோர் வேலை தேடுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் இருந்து 27 பேர் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று வேலைவாய்ப்பின்றி தவித்து வந்ததை அறிந்த அங்குள்ள இந்தியத் தூதரகம் அவர்களை மீட்டு தாயகம் அனுப்பி வைத்தது.
சில பெண்களும் இத்தகைய மோசடி கும்பலுக்கு இரையாகி துபை, ஓமன் போன்ற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். பின்னர் அவர்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதுதொடர்பான புகார்கள் அதிக அளவில் இந்தியத் துணைத் தூதரகங்களை வந்தடைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதரக அதிகாரி விபுல், செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
போலி விசா மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு வந்து சிக்கிக் கொண்ட நூற்றுக் கணக்கான இந்தியர்களை நாங்கள் மீட்டு தாயகம் அனுப்பி வருகிறோம். பொதுவாக வேலைவாய்ப்பு கிடைத்த பிறகே சம்பந்தப்பட்ட நாட்டுக்குப் பயணிக்க வேண்டும்.
சுற்றுலா விசா மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு வருவதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். உரிய வேலை உறுதிச் சான்று, அதற்கான முறையான விசா உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே வரவேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com