அருணாசலப் பிரதேசத்துக்கு சீனா உரிமை கோருவது அர்த்தமற்றது: சீன அரசியல் வல்லுநர்

இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்துக்கு சீனா உரிமை கோருவது அர்த்தமற்றது என்று அந்நாட்டின் அரசியல் வல்லுநர் வாங் டவோ டவோ கூறியுள்ளார்.

இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்துக்கு சீனா உரிமை கோருவது அர்த்தமற்றது என்று அந்நாட்டின் அரசியல் வல்லுநர் வாங் டவோ டவோ கூறியுள்ளார்.
இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த மாநிலத்தில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து, அருணாசலப் பிரதேசத்தின் 6 பகுதிகளுக்கு சீனா தங்கள் அரசு சார்பில் பெயர் சூட்டியது. அருணாசலப் பிரதேசத்தின் மீதான சீனாவின் உரிமையை மீண்டும் உறுதி செய்யும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அந்நாட்டின் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டது.
ஆனால், அருணாசலுக்கு தலாய்லாமாவுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, 'அருணாசலப் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி' என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இந்நிலையில், சீனாவின் பிரபல 'ஜின்சூ டாட் காம்' இணையதளத்தில், அந்நாட்டு அரசியல் வல்லுநர் வாங் டவோ டவோ எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்ச்சைக்குரிய அந்த மாநிலம் தொடர்பாக, இந்தியா-சீனா இடையே பல்லாண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. எனினும், சீனாவை பொருத்தவரை, அந்தப் பகுதி குறைந்த மதிப்புடையதுதான். அதனை ஒரு சொத்தாகக் கருத முடியாது. அப்பகுதிக்கான பொருளாதார, அரசியல் நிர்வாகத்துக்கான செலவுகள் மிக அதிகம். இதனால், அப்பகுதிக்கு உரிமை கோருவது அர்த்தமற்றது. இப்பிரச்னையை தீர்க்க போரில் ஈடுபடுவது என்பது சீனாவுக்கு கடினமான முடிவாகவே இருக்கும். அதுபோன்ற முடிவை எடுப்பது, திபெத்தின் இதர பகுதிகளில் பிரிவினையை மேலும் வலுப்படுத்தவே செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
சீனாவில் அரசின் நிலைப்பாடுகளுக்கு மாறாக பிரபல அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறுவது என்பது மிக அரிதாகவே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாசலப் பிரதேசம் மட்டுமன்றி சிக்கிமின் டோகாலாம் பகுதியிலும் சீனா-இந்தியா இடையே எல்லைப் பிரச்னை நிலவுகிறது. அந்தப் பகுதியை ஆக்கிரமித்து சாலை அமைக்க, சீனப் படைகள் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அங்கு இரு நாடுகளும் படைகளைக் குவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com