மாநிலங்களவையில் முதல் முறையாக தனிப்பெரும் கட்சியானது பாஜக

மாநிலங்களவையில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, தனிப்பெருங்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

மாநிலங்களவையில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, தனிப்பெருங்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு 57 உறுப்பினர்கள் உள்ளனர்.
மத்திய அமைச்சராக இருந்த அனில் மாதவ், கடந்த மே மாதம் மரணம் அடைந்தார். அதையடுத்து, மாநிலங்களவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜகவைச் சேர்ந்த சம்பதியா உய்கே, மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர், எம்.பி.யாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதையடுத்து, மாநிலங்களவையில் பாஜக பெரும்பான்மை பலத்தை அடையாவிட்டாலும், 58 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாநிலங்களவையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது இதுவே முதல் முறையாகும். அடுத்த ஆண்டு வரை, மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய கட்சியாக நீடித்திருக்கலாம். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் இந்த ஆண்டில் மரணம் அடைந்தது, அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவுக்கு காரணமானது.
இந்நிலையில், குஜராத்தில் 2 பாஜக மற்றும் 1 காங்கிரஸ் எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அதையடுத்து, காலியாகும் அந்த இடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழைம மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில், 2 இடங்களில் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. மேலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் வெற்றி பெறுவதைத் தடுக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதேபோல், மேற்கு வங்கத்தில் 2 காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 6 பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. காலியாகும் அந்த இடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியும். மற்ற 5 இடங்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இதுதவிர, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. அதையடுத்து நடைபெறும் தேர்தலில் பாஜகவில் இருந்து ஒரே நேரத்தில் 8 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன் காரணமாக, மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் பலம் மேலும் அதிகரிக்கும்.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. எனினும், மாநிலங்களவையில் அக்கூட்டணிக்கு குறைவான உறுப்பினர்களே இருப்பதால், புதிய சட்டத் திருத்தம், புதிய மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு போராடி வருகிறது. மேலும், அதிமுக, பிஜு ஜனதா தளம் போன்ற தோழமைக் கட்சிகளுடன் ஆதரவுடன் மத்திய அரசு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் அண்மையில் இணைந்த நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். எனினும், மத்தியில் கூட்டணியில் இணைவது குறித்து, அக்கட்சி இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. மத்தியிலும் ஜேடியு கூட்டணி அமைத்தால், மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com