கைத்தறி, விசைத்தறி பொருள்களுக்கு வரி விலக்கு வேண்டும்

கைத்தறி, விசைத்தறி பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் டி. ஜெயக்குமார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் டி. ஜெயக்குமார்.

கைத்தறி, விசைத்தறி பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.
தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் 20-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் டி. ஜெயக்குமார் பங்கேற்றுப் பேசியதாவது:
வறுகடலை மீதான வரியை 12-லிருந்து 5 சதவீதமாகவும், இட்லி - தோசை மாவு மீதான வரியை 18-லிருந்து 12 சதவீதமாகவும் குறைக்க ஃபிட்மன்ட் குழு பரிந்துரைத்தது. எனினும், வறுகடலை, இட்லி-தோசை மாவுக்கு வரியிலிருந்து முழுமையாக விலக்களிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு தற்போது கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. எனவே, கைத்தறி, விசைத்தறி பொருள்களுக்கு முற்றிலும் வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும். பட்டாசுக்கு 28 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்துறை பெரிதும் பாதிக்கக்கூடும். எனவே, இந்த வரிவீதத்தைக் குறைக்க வேண்டும். தீப்பெட்டித் தொழில், ஏராளமான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. அதனால், மெழுகு தீப்பெட்டிகள் உள்பட அனைத்து வகையான தீப்பெட்டிகளுக்கும் ஒரே சீரான வரி விதிக்க வேண்டும். கடலை மிட்டாய் மீதான வரியை 18-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
20 லிட்டர் குடிநீர் கேன், மீன்பிடி கயிறுகள், வலைகள் மற்றும் கருவாடு, ஜவ்வரிசி, எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படும் அரிசித் தவிடு ஆகியவற்றுக்கு வரியிலிருந்து முழுவதுமாக விலக்களிக்க வேண்டும். ஊறுகாய், விவசாயத்திற்குப் பயன்படும் நுண் ஊட்டச்சத்துகள் ஆகியவற்றின் மீதான வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
பம்புசெட்கள் மீதான வரியை சதவீதமாகக் குறைக்க வேண்டும். அன்றாடம் பயன்படுத்தப்படும் வெட்கிரைண்டர் மீதான வரியை 28-லிருந்து 12 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
கம்ப்ரஸர், ஸ்டீல், பிளாஸ்டிக் பர்னீச்சர், மின்னணு எடை இயந்திரங்கள் மீதான வரியை 28-லிருந்து 18 சதவீதமாகவும், மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் மீதான வரியை 18-லிருந்து 12சதவீதமாகவும் குறைக்க வேண்டும். வீடு, விவசாயம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மின் கம்பிகள், மின் உபகரணங்கள் மீதான வரியை 28-லிருந்து 12 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
சானிட்டரி நாப்கின்கள்: தாய்மார்கள் மற்றும் பெண்களின் நலன் கருதி சானிட்டரி நாப்கின்கள், "பாஸ்போரிக் ஆசிட்' மீதான வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். அச்சுத் தொழிலுக்கு வரியிலிருந்து முற்றிலும் விலக்களிக்க வேண்டும். டிராக்டர், ஆட்டோ உதிரி பாகங்கள் மீதான வரியை 12 சதவீதமாகக் குறைக்க வேண்டும். செயற்கை ரப்பர் கொண்டு செய்யப்படும் "டயர் ரீடிரேடிங்' மீதான வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு சேவைகளுக்கு வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவுக்கு வரியிலிருந்து முழுவதுமாக விலக்களிக்க வேண்டும். கேளிக்கை பூங்காக்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும்.
கோரை பாய், வெள்ளிக் கொலுசு, மெட்டி, அரைஞான் கயிறு, தாலிக்கயிறு ஆகியவற்றுக்கு வரியிலிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்க வேண்டும். கிரானைட், மார்பிள் ஆகியவற்றின் மீது 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கட்டுமானச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இவற்றின் மீதான வரியை 12 சதவீதமாகக் குறைக்க வேண்டும். பட்டினால் நெய்யப்பட்ட ஆடைகளுக்கும், பட்டு நூலுக்கும் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். ஜரிகை மீதான வரியை 12-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.
"இரு அணிகளும் இணைந்தால்
அதிமுக கூடுதல் பலம் பெறும்'
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் அதிமுக கூடுதல் பலம் பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் பெரும்பலம் ஏற்படும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இப்போதும் பலத்துடன் இருக்கிறோம். அவர்கள் வரும் போது கூடுதல் பலம் ஏற்படும். பிரிந்து போனவர்கள் மீண்டும் வருவார்கள், இணைவார்கள். அதிமுக ஆட்சி முழு பலத்துடன் நிலைத்து நிற்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com