தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட எலும்புக் கூட்டை பயன்படுத்தி மருத்துவம் பயின்ற திருவிதாங்கூர் அரசர்!

திருவிதாங்கூர் அரசர் ஒருவர், யானைத் தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட மனித உடல் எலும்புக் கூட்டைப் பயன்படுத்தி மருத்துவம் பயின்றுள்ளார். இந்தச் சம்பவம், கேரள மாநிலத்தில், கடந்த 1850களில் நடைபெற்றுள்ளது.
தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட எலும்புக் கூட்டை பயன்படுத்தி மருத்துவம் பயின்ற திருவிதாங்கூர் அரசர்!

திருவிதாங்கூர் அரசர் ஒருவர், யானைத் தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட மனித உடல் எலும்புக் கூட்டைப் பயன்படுத்தி மருத்துவம் பயின்றுள்ளார். இந்தச் சம்பவம், கேரள மாநிலத்தில், கடந்த 1850களில் நடைபெற்றுள்ளது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட அரசர் ஸ்வாதி திருநாளின் சகோதரரான உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, சிறு வயது முதலே ஐரோப்பிய உடைகள், நாகரிகம், பொழுதுபோக்கு, மருத்துவ சிகிச்சை முறைகள் ஆகியவற்றில் தனியாத ஆர்வம் கொண்டிருந்தார்.
வளர்ந்து இளைஞரான பிறகு, அவர் ஆங்கில மருத்துவம் பயில விரும்பினார். மருத்துவம் பயின்றால் மனித உடல் மாதிரிகளை அல்லது இறந்தவர்களின் உடல்களைத் தொட நேரிடும்.
ஆனால், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்களின் உடலைத் தொடக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது.
தனக்கு வந்த சோதனையை தகர்ப்பதற்கு, அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
கைவினைக் கலைஞர் ஒருவரிடம், யானைத் தந்தத்தைக் கொண்டு மனித உடல் எலும்புக் கூடு மாதிரியை வடிவமைக்குமாறு உத்தரம் திருநாள் கூறினார்.
அந்தக் கைவினைக் கலைஞரும், சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட மனித உடல் எலும்புக் கூடு மாதிரியை வைத்து யானைத் தந்தத்தால், எலும்புக் கூடு மாதிரியை தத்ரூபமாக வடிவத்தார்.
அந்த எலும்புக் கூடு மாதிரியை வைத்து மருத்துவம் பயின்ற அரசர் உத்தரம் திருநாள், பின்னாளில் தனியாக மருத்துவமனை தொடங்கி, மக்களுக்கு சிகிச்சை அளித்தார். சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சைகளும் செய்திருக்கிறார்.
பிரிட்டன் உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் இறக்குமதி செய்து மக்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.
அவருக்கு, அப்போதைய உறைவிட மருத்துவர் பிரவுன் என்பவர் மருத்துவம் கற்றுக் கொடுத்திருக்கிறார். மருத்துவர் பிரவுன், பிரிட்டன் சென்றபோது, சுயமாகவே மருத்துவ நிபுணர்கள் எழுதிய நூல்களைக் கொண்டு உத்தரம் திருநாள் மருத்துவம் பயின்றுள்ளார்.
அவர், மருத்துவம் பயில்வதற்காக உருவாக்கப்பட்ட அந்த எலும்புக் கூடு, இன்னும் சிதையாமல், திருவனந்தபுரம் விலங்கியல் பூங்கா வளாகத்தில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அந்த யானைத் தந்த எலும்புக் கூடு, 1853-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது என்று அருங்காட்சிய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
எனினும், அந்த எலும்புக் கூடு மாதிரியை நுட்பமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைத்த அந்தத் திறமை வாய்ந்த கைவினைக் கலைஞர் யார் என்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்றும் அருங்காட்சிய நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
அருங்காட்சியத்துக்கு வரும் மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும், அந்த எலும்புக் கூட்டின் நேர்த்தியான, துல்லியமான வடிவமைப்புக் கண்டு வியந்து போகிறார்கள் என்று அந்த அருங்காட்சியக நிர்வாகி ஒருவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com