பெங்களூரு ரிசார்ட்டில் தங்கியிருந்த 44 எம்எல்ஏக்கள் குஜராத் திரும்பினர்

குஜராத்தில் நாளை நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, பெங்களூர் ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த
 பெங்களூரு ரிசார்ட்டில் தங்கியிருந்த 44 எம்எல்ஏக்கள் குஜராத் திரும்பினர்


பெங்களூரு: குஜராத்தில் நாளை நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, பெங்களூர் ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த குஜராத் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 44 பேர் 10 நாட்களுக்குப்பின் அகமதாபாத் திரும்பினர். அவர்களை அகமதாபாத் விமான நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அகமது பட்டேல் வரவேற்றார்.

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில், பாஜக தலைவர் அமீத்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. மூன்றாவது இடத்திற்கு போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெறுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பேரம் பேசும் படலம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 6 பேர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து வெளியேறியதால் பீதியடைந்த காங்கிரஸ் மேலிடம், மேற்கொண்டு சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், கடந்த மாதம் 29 ஆம் தேதி 44 எம்எல்ஏக்களையும் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர்.

நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், பெங்களூர் ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரும் பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் அகமதாபாத் திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களை அகமது பட்டேல் நேரில் சென்று வரவேற்றார்.

அகமதாபாத் அருகே உள்ள ஓய்வு விடுதியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு, சட்டப்பேரவைக்கு நேரடியாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அகமது பட்டேல், எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் பக்கமே உள்ளதாகவும், மாநிலங்களவை தேர்தலில் வெற்றி உறுதி எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதற்கான தகவல் வெளியான பின்னரே காங்கிரஸ் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியது.

சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது பட்டேல், ஐந்தாவது முறையாக தற்போது மாநிலங்களவைக்குப் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெறச் செய்வது கட்சியின் கவுரவப் பிரச்சனை என்பதால், காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com