ஒரு சாலை விபத்து; ஏழு மணி நேர அலைக்கழிப்பில் பிரிந்த உயிர்: மனிதாபிமானம் மரித்த கதை! 

சாலை விபத்தில் சிக்கிய தமிழகத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கேரள மருத்துவமனைகளின் அலட்சியத்தால் ஏழு மணி நேர அலைக்கழிப்புக்குப் பின்னால் உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு சாலை விபத்து; ஏழு மணி நேர அலைக்கழிப்பில் பிரிந்த உயிர்: மனிதாபிமானம் மரித்த கதை! 

கொல்லம்: சாலை விபத்தில் சிக்கிய தமிழகத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கேரள மருத்துவமனைகளின் அலட்சியத்தால் ஏழு மணி நேர அலைக்கழிப்புக்குப் பின்னால் உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த வாலிபர் முருகன் (30). கேரளாவில் வேலை செய்து வந்த இவர், நேற்று இரவு 11 மணி அளவில் கொல்லத்தில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது சாலை விபத்து ஒன்றில் சிக்கினார். கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் உடனடியாக அவசர உதவி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

கொல்லத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துமனையான மெடிசிட்டி உட்பட இரண்டு மருத்துவமனைகளுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருடன் துணையாக யாரும் இல்லையென்ற காரணத்தால் அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது. இந்த காரணத்தினைக் கூறி அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

பின்னர் அவர் அங்கிருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஏறக்குறைய இரண்டு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு அவசர சிகிச்சை அறைகள் காலியாக இல்லை மற்றும் வெண்டிலேட்டர் வசதி இல்லை ஆகிய காரணங்களுக்குப் பிறகு அங்கும் அவரை அனுமதித்து சிகிச்சையளிக்கவில்லை..

இதன் காரணமாக ஏறக்குறைய ஏழுமணிநேரங்கள் ஆம்புலன்ஸி லேயே இருந்த முருகன் இன்று காலை 6 மணி அளவில் மரணமடைந்தார்.

இந்த துயர சம்பவம் குறித்து கொல்லம் காவல்துறை ஆணையர் அஜிதா பேகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அளித்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் காட்டியமைக்காக அந்த இரண்டு மருத்துவமனைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குளானவர் உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்ட பொழுதும் அங்கு நிலவிய குறைபாடுகள் காரணமாக அவருக்கு உரிய சிகிச்சையளிக்க இயலவில்லை.

இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். இது தொடர்பாக நாங்கள் தனியார் மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டவரை அனுமதிக்க மறுத்தனவா என்பது குறித்து  தீவிரமாக  விசாரிப்போம்.

இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

சாலை விபத்துக்களில் காயம்பட்டவரை எந்த வித விசாரணைகளும் இன்றி மருத்துவமனைகள் உடனடியாக அனுமதியளித்து சிகிச்சை வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீப்புகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் இருக்கும் சமயத்தில், இத்தகைய மனிதாபிமானற்ற சம்பவங்கள் எளிதில் ஜீரணிக்க இயலாத ஒன்றாக இருக்கின்றன.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com