அமர்நாத் யாத்ரீகர்கள் தாக்கப்பட்ட வழக்கு: 3 பேர் கைது

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, 3 பேரை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்தனர்.
அமர்நாத் யாத்ரீகர்கள் தாக்கப்பட்ட வழக்கு: 3 பேர் கைது

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, 3 பேரை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை ஐ.ஜி. முனீர் கான், அனந்த்நாகில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது கடந்த மாதம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய 3 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்கள் மூவரும், அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்குப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற பயங்கரவாதியின் தலைமையில் 4 பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நிகழ்த்த கடந்த ஜூலை 9-ஆம் தேதி முயற்சி செய்தனர்.
எனினும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்ததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அந்த நான்கு பேர் குழுவில் உள்ளூரைச் சேர்ந்த யாவர் என்பவர் இருந்துள்ளார். மற்ற இருவரும் பாகிஸ்தானியர்கள் என்று நம்பப்படுகிறது.
அந்த நான்கு பேருக்கும் உதவி செய்த பிலால் அகமது ரேஷி, ஐஜாஸ் வாகே, ஜகூர் அகமது ஆகிய 3 பேரும்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்காக உளவு வேலை பார்த்த அந்த மூவரும், தாக்குதல் நடத்த கான்பல் அருகே உள்ள பொடேன்கோ பகுதியைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தெரியப்படுத்தினர்.
மேலும், தெற்கு காஷ்மீரின் ஸ்ரீகுஃப்வாரா மற்றும் குண்ட்வானி பகுதிகளில் நான்கு பயங்கரவாதிகளுக்கும் அவர்கள் மறைவிடங்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், பயங்கரவாதிகள் அபு இஸ்லாமில், யாவர் ஆகிய இருவரது படங்களையும் போலீஸார் வெளியிட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள பிலால் அகமது ரேஷியின் அண்ணன் அடில் என்பவர் லஷ்கர் பயங்கரவாதி எனவும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமர்நாத் சென்று திரும்பிக் கொண்டிருந்த யாத்ரீகர்களின் பேருந்து மீது பயங்கரவாதிகள் கடந்த மாதம் 10-ஆம் தேதி நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தெற்கு காஷ்மீர் காவல்துறை டி.ஐ.ஜி. ஸ்வயம் பிரகாஷ் தலைமையில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தனிப் படை அமைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com